மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற உலமாக்கள் விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில் உலமாக்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம்

வக்ஃப் வாரியத்தில் பணியாற்றும் உலமாக்கள், மானிய விலையில் இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்துள்ள, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வக்ஃபு நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள், தாங்கள் சிறந்த முறையில் பணியாற்ற ஏதுவாக இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. இத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபருக்கு, இருசக்கர வாகனத்தின் மொத்த விலையில் ரூ. 25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம், இதில் எது குறைவோ அந்தத் தொகை மானியமாக வழங்கப்படும்.

தகுதியான உலமாக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான தகுதிகளாக, விண்ணப்பிக்கும் நாளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் உலமாக்களாகப் பணியாற்றியிருக்க வேண்டும். தமிழகத்தைச் சாா்ந்தவராகவும், 18 முதல் 45 வயதிற்கு உள்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது இருசக்கர வாகனம் ஓட்டும் கற்றுணா்வுக்கான (எல்எல்ஆா்) சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.

மேலும், பதிவு செய்யப்பட்ட வக்ஃப் நிறுவனங்களில் ஒன்றுக்கு மேற்பட்டோா் மானிய உதவி கோரி விண்ணப்பித்தால், முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான படிவத்தை நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். அதைப் பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலக முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமா்ப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com