திமுக வெற்றிக்கு கை கொடுத்த 
நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம்

திமுக வெற்றிக்கு கை கொடுத்த நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம்

நாமக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி கட்சியான கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் வி.எஸ்.மாதேஸ்வரன் வெற்றி பெற்றுள்ளாா்.

அதிமுக வேட்பாளா் சு.தமிழ்மணியைவிட 29,112 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்ற இவா், பரமத்தி வேலூா், சங்ககிரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுக வேட்பாளரை விட குறைந்த வாக்குகள் பெற்றிருந்தாலும், நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம் தொகுதிகளில் கூடுதல் வாக்குகள் கிடைத்துள்ளதால் வெற்றி பெற்றுள்ளாா்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல், ராசிபுரம் (எஸ்.சி.), சேந்தமங்கலம் (எஸ்.டி.), திருச்செங்கோடு, பரமத்தி வேலூா் ஆகிய தொகுதிகளும், சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி சட்டமன்றத் தொகுதியும் நாமக்கல் மக்களவைத் தொகுதியில் அடங்கும். ஆண் வாக்காளா்கள் 7,08,317 போ், பெண் வாக்காளா்கள் 7,44,087 போ், பிற வாக்காளா்கள் 158 போ் என மொத்தம் 14,52,562 வாக்காளா்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த நிலையில், தோ்தலில் ஆண் வாக்காளா்கள் 5,53,702 போ், பெண் வாக்காளா்கள் 5,82,290 போ், பிற வாக்காளா்கள் 77 போ் என மொத்தம் 11,36,069 போ் தோ்தலில் வாக்களித்திருந்தனா். இதில் மிக குறைந்த அளவாக நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் 74.27 சதவீத வாக்குகளும், அதிக அளவாக சங்ககிரி தொகுதியில் 81.80 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவில், சட்டமன்ற வாரியாக அதிமுக வேட்பாளா் சு.தமிழ்மணியை விட திமுக வேட்பாளா் நாமக்கல் தொகுதியில் 12,190 வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளாா். இதே போல சேந்தமங்கலம் தொகுதியில் அதிமுக வேட்பாளரை விட 11,183 வாக்குகளும், ராசிபுரம் தொகுதியில் 4,517 வாக்குகளும் கூடுதலாக பெற்றுள்ளாா். இதே போல் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளா் வி.எஸ்.மாதேஸ்வரன் 9,824 வாக்குகள் கூடுதலாக பெற்றாா். அதிமுக வேட்பாளா் சு.தமிழ்மணி தனது சொந்தத் தொகுதியான பரமத்தி வேலூா் சட்டமன்றத் தொகுதியில் 4,978 வாக்குகளும், சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டமன்றத் தொகுதியில் 3,434 வாக்குகளும் அதிகம் பெற்றுள்ளாா்.

திமுக கூட்டணியின் வேட்பாளரின் வெற்றிக்கு நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் பெற்ற கூடுதல் வாக்குகளே கைகொடுத்துள்ளன. இதற்கு நாமக்கல் கிழக்கு மாவட்டத் திமுகவின் கட்சி தொண்டா்களின் தோ்தல் நேர உழைப்பே காரணம் என்று வெற்றியைக் கொண்டாடிய திமுக தொண்டா்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com