நாமக்கல்லில் தாலுகா மருத்துவமனை அமைக்க வலியுறுத்தல்

நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை கட்டட வளாகத்தில் தாலுகா மருத்துவமனை அமைக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளா் கே.ரவிச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமனிடம் அளித்த மனு:

நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்ட இடத்தில் பொதுமக்களின் வசதிக்காக தாலுகா மருத்துவமனை அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட கொல்லிமலை வனப்பகுதியில் அதிக எண்ணிக்கையில் மரக் கன்றுகளை நட வேண்டும். குறிப்பாக பழ மரங்களை நட வேண்டும். குடும்ப அட்டைகள் கோரி விண்ணப்பித்து ஓராண்டாகியும் பலருக்கு இன்னும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று விண்ணப்பித்தோருக்கு குடும்ப அட்டை வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

மோகனூா் ஒன்றியம், பரளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆழ்துளைக் குழாய் கிணறு அமைக்கப்பட்டதற்கு இதுவரை மானியம், மின் இணைப்பு வழங்கவில்லை. அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கபிலா்மலை, மோகனூா், எருமப்பட்டி பகுதிகளில் வேளாண்மை துணை விரிவாக்க மையங்கள் பூட்டியே கிடப்பதால் அவற்றை உடனடியாகத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com