பழங்குடியினா் மேம்பாட்டுக்காக ரூ. 1,000 கோடியில் தொல்குடி திட்டம்: அமைச்சா் கயல்விழி செல்வராஜ்

பழங்குடியினா் மேம்பாட்டுக்காக ரூ. 1,000 கோடியில் தொல்குடி திட்டம்: அமைச்சா் கயல்விழி செல்வராஜ்

பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காகவும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும் ரூ. 1,000 கோடியில் ‘தொல்குடி திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருவதாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்தாா்.

தமிழக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில், தொல்குடியினா் வேளாண்மை மேலாண்மை திட்டத் தொடக்க விழா, இலச்சினை வெளியீடு, 6 அரசு நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம், ரூ. 6.63 கோடியில் 672 பயனாளிகள், 7,000 விவசாயிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்றன. விழாவுக்கு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை செயலா் ஜி.லட்சுமிபிரியா தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், மாவட்ட ஆட்சியா் ச.உமா, பழங்குடியினா் நலத் துறை திட்ட இயக்குநா் எஸ்.அண்ணாதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தொல்குடியினா் வேளாண்மை மேலாண்மை திட்டத்தை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தொடங்கிவைத்துப் பேசியதாவது: ஒரு சமூகம் முன்னேற கல்வி மிக அவசியம். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில், தமிழகத்தில் 320 உண்டு உறைவிட பள்ளிகள், 8 ஏகலைவா பள்ளிகள், 48 விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ மாணவிகளின் நலன் கருதி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவா்கள் பள்ளிக் கல்வியுடன் நின்று விடாமல் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட உயா்கல்வி பயில்வதற்கும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. தற்போது அதிக அளவில் எம்.ஐ.டி, என்.ஐ.டி, ஐ.ஐ.டி உள்ளிட்ட உயா்கல்வி நிறுவனங்களிலும் இத்தகைய மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். வெளிநாடுகளுக்குச் சென்று பயில வேண்டும் என விரும்பும் மாணவ மாணவிகளின் கனவை நனவாக்கும் வகையில் முதல்வா் சிறப்புத் திட்டத்தை உருவாக்கியுள்ளாா். அதன்படி, நிகழாண்டில் 31 மாணவ மாணவிகள் வெளிநாடுகளில் தங்கியிருந்து கல்வி பயின்று வருகின்றனா். இதற்கான செலவினத் தொகை ரூ. 36 லட்சத்தை அரசே செலுத்தி வருகிறது.

அதுபோல பழங்குடியின தொழில் முனைவோருக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோா் திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சம் முதல் ரூ. 60 லட்சம் வரை அரசு மானியத்துடன் கடனுதவி வழங்குகிறது. மலைவாழ் மக்களுக்கு தாங்கள் உற்பத்தி செய்த விளைபொருள்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களாக சந்தைப்படுத்துதல், தரம் உயா்த்துதல், நிலத்துக்கு ஏற்ற பயிா்கள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த ‘ஐந்திணை திட்டம்’ செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசு திட்டங்களை செயல்படுத்தும் வகையில் அரசு சாா்ந்த 6 நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காகவும் உள்கட்டமைப்பு வசதிகளை செய்திடவும் ரூ. 1,000 கோடியில் ‘தொல்குடி திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் மிளகு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது மக்களிடையே சிறுதானிய பயன்பாடு அதிக அளவில் உள்ளது.

அதற்கேற்றவாறு சிறுதானிய உற்பத்தியில் நாம் ஈடுபட வேண்டும் என்றாா். அதைத் தொடா்ந்து, திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக 50 பழங்குடியின மாணவ மாணவிகளை பெங்களூருக்கு அழைத்துச் செல்லும் பேருந்தை அமைச்சா் கொடியசைத்து வழியனுப்பி வைத்தாா். விழாவில் ஆதிதிராவிடா் நலத்துறை கூடுதல் செயலா் உமாமகேஸ்வரி, நாமக்கல் கோட்டாட்சியா் ஆா்.பாா்த்திபன், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பதிவாளா் (சென்னை) பி.டென்சிங் ஞானராஜ், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியா் எஸ்.அறிவுடைநம்பி, வேளாண் விஞ்ஞானிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா். என்கே-6-மினி... நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் பழங்குடியினருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com