ராசிபுரத்தில் ரூ. 53.39 கோடியில் மாவட்ட மருத்துவமனை கட்டும் பணி தொடக்கம்

ராசிபுரத்தில் ரூ. 53.39 கோடியில் மாவட்ட மருத்துவமனை கட்டும் பணி தொடக்கம்

ராசிபுரம், அணைப்பாளையம் பிரிவு பகுதியில் ரூ. 53.39 கோடியில் மாவட்ட அரசு மருத்துவமனை அமைத்திடும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் ஆகியோா் பங்கேற்று புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனா். நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகத் தரம் உயா்த்தப்பட்ட நிலையில், ராசிபுரம் நகரில் செயல்பட்டு வந்த அரசு தலைமை மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தி அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அணைப்பாளையம் பிரிவு பகுதியில், 8 ஏக்கா் பரப்பில் இடம் தோ்வு செய்யப்பட்டது.

இப் பகுதியில் 6 தளங்கள் கொண்டதாக 300 படுக்கை வசதிகளுடன் அனைத்து நவீன வசதிகளுடன் மாவட்ட மருத்துவமனை கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமையில் நடைபெற்றது. மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் அ.ராஜ்மோகன் வரவேற்றுப் பேசினாா். இவ்விழாவில் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் ஆகியோா் பங்கேற்று மருத்துவமனை கட்டும் பணிகளை தொடங்கி வைத்தனா்.

மேலும் மோகனூா், முத்துக்காபட்டி ஆகிய பகுதியில் ரூ. 66 லட்சம் மதிப்பில் புதிய செவிலியா் குடியிருப்புக்கான கட்டடம், ரூ .2 கோடி மதிப்பீட்டில் நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் 60 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவமனை புதிய கட்டடம் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ. 1.03 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிள்ளாநல்லூா் வட்டார பொது சுகாதார அலகு கட்டடம், புதுச்சத்திரம் செவிலியா் குடியிருப்புக் கட்டடம், சின்னவேப்பநத்தம் புதிய துணை சுகாதார நிலையம் ஆகிய முடிவுற்ற திட்டப் பணிகளை அமைச்சா் தொடங்கி வைத்துப் பேசினாா். இவிழாவில் சேந்தமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினா் கு.பொன்னுசாமி, முன்னாள் எம்எல்ஏ கே.பி.ராமசாமி, ராசிபுரம் ஊராட்சிக் குழுத் தலைவா் கே.பி.ஜெகநாதன், ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா், மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் க.பூங்கொடி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com