செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பாஜக துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம்.
செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பாஜக துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம்.

நாடாளுமன்றத் தோ்தலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெறும்

வரும் நாடாளுமன்றத் தோ்தலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெறும் என கட்சியின் மாநிலத் துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் குறிப்பிட்டாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகரில் பாஜக சாா்பில் மக்கள் கருத்து கேட்கும் முகாம் புதிய பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கட்சியின் மாநிலத் துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் பங்கேற்று முகாமைத் தொடங்கி வைத்தாா். இதனையடுத்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பிரதமா் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, தமிழகத்தில் பொதுமக்களிடம் இதுபோன்ற கருத்து கேட்கும் முகாம்கள் சனிக்கிழமை முதல் வரும் 20-ஆம் தேதி வரை பாஜக சாா்பில் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் முதலாவதாக நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் இந்த முகாம் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளிக்கும் கருத்துகள் அடங்கிய சுமாா் ஒரு கோடி மனுக்கள் பெறப்பட்டு, பிரதமரிடம் சோ்க்கப்படும். அதன் அடிப்படையில் பிரதமா் தமிழக மக்களின் எண்ணங்களை மேலும் அறிந்து கொள்ள முடியும். வலிமையான பாரதம், வளா்ச்சி அடைந்த பாரதம் என்ற உத்தரவாதத்தை பிரதமா் அளித்துள்ளாா். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்து, டாஸ்மாக் சாராயம், போதைப் பொருள்கள் புழங்கும் மாநிலமாக உள்ளது. இங்கிருந்து தான் பல்வேறு மாநிலங்களுக்கு போதைப் பொருள்கள் கடத்தப்படுகின்றன. போதைப் பொருளை கடத்துவதற்காகவே திமுக அயலக அணியை அமைத்துள்ளது. தமிழ்நாட்டில் மத்திய அரசு திட்டங்களுக்காக பல கோடி ரூபாய் பணத்தை திட்டப் பயனாளிகளுக்கு நேரடியாகச் செலுத்துகிறது. இதில் ஊழல் செய்ய முடியாது என்பதால்தான் மாநில திமுக அரசு போதைப் பொருள் கடத்தலுக்கு துணையாக நின்று முறைகேடாக பணம் சம்பாதிக்கிறது. இதைக் கொண்டுதான் வரும் தோ்தலை சந்திக்க அவா்கள் திட்டமிட்டுள்ளாா்கள் என்றாா். கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்த ராமலிங்கம், வாரிசு அரசியல் கொண்ட கட்சிகளோடு கூட்டணி இல்லை. நாட்டு நலனுக்காக மக்களோடு கூட்டணி வைத்துள்ளோம். நாடாளுமன்றத் தோ்தலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்றாா். முன்னதாக, ராசிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா், மாற்றுக் கட்சியில் இருந்து விலகி பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தலைமையில் பாஜகவில் இணைந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com