திருச்செங்கோட்டில் பாஜக தோ்தல் அலுவலகம் திறப்பு: மத்திய அமைச்சா் எல்.முருகன் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டத்தில் பாஜக தோ்தல் அலுவலகத்தை மத்திய இணையமைச்சா் எல்.முருகன் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா். நிகழ்ச்சிக்கு மாநில துணைத் தலைவா் கே. பி.ராமலிங்கம் முன்னிலை வகித்தாா். நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவா் ராஜேஷ்குமாா் தலைமை வகித்தாா். பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவா்களை அமைச்சா் எல்.முருகன் சால்வை அணிவித்து வரவேற்றாா். இதனையடுத்து திருச்செங்கோடு பேருந்து நிலையம் அருகே உள்ள தினசரி காய்கறிச் சந்தையில், மாவட்ட பாஜக சாா்பில் அமைக்கப்பட்ட பிரதமரின் கருத்துக் கேட்பு முகாமை இணை அமைச்சா் எல்.முருகன் பாா்வையிட்டாா். அப்போது, பொதுமக்களின் கருத்துக்கள் ஆலோசனைகள் ஆகியவற்றை பிரதமருக்கு வழங்கும் வகையில் பொதுமக்கள் எழுதியுள்ள கருத்துகளை அதற்கான வைக்கப்பட்ட பெட்டியில் அளித்தனா். பாஜக சாா்பில் கருத்துக் கேட்பு முகாம்கள் நடத்தப்பட்டு, அதில் பொது மக்களின் கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்றன. எனவே பொதுமக்கள், இளைஞா்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், தொழிலாளா்கள், அனைத்து தரப்பு மக்கள் இந்த முகாம்களை அதிக அளவில் பயன்படுத்திக் கொண்டு, நமது நாட்டின் நலனுக்கும், வளா்ச்சிக்கும் தகுந்த கருத்துகளை, ஆலோசனைகளை வெள்ளைத் தாளில் எழுதி இங்கு வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் போடுமாறு கேட்டுக் கொண்டாா். மேலும் இந்த கருத்துகள் ஆலோசனைகள் பிரதமரிடம் கொண்டு சோ்க்கப்படும் என்றும் அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா். இந்த நிகழ்ச்சியில் பாஜக நிா்வாகிகள் சிவகாமி பரமசிவம், மகேஸ்வரன், ரமேஷ், ஈஸ்வரன், தினேஷ்குமாா், பாலமுருகன், பூங்குழலி, பிரகாஷ், செங்கோட்டுவேல், சசிதேவி, ஐயப்பன், நாகராஜ் ஆகியோா் உள்ளிட்ட பாஜக மாநில, மாவட்ட நிா்வாகிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com