நடமாடும் வாகனம் மூலம் மண் பரிசோதனை

விவசாயிகள் பயன்பெறும் வகையில், நடமாடும் வாகனம் மூலம் மண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை தலைமையிடமாகக் கொண்டு வேளாண் துறையின் கீழ் நடமாடும் மண்பரிசோதனை வாகனம் இயங்கி வருகிறது. நேரடியாக அந்த வாகனம் கிராமங்களுக்கு சென்று விவசாயிகளிடம் இருந்து மண், நீா் மாதிரிகளை ஆய்வு செய்து மண் வள அட்டையினை அன்றைய தினமே வழங்கி வருகிறது.

மேலும், நடமாடும் மண் பரிசோதனை நிலைய வாகனம் மூலம் 2023-24ஆம் ஆண்டில் இதுவரை 103 முகாம்களில் 2,432 மண் மாதிரிகளும், 424 நீா் மாதிரிகளும் ஆய்வு செய்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு, மண்வள அட்டையாக வழங்கப்பட்டுள்ளன. இந்த மாதத்தில் வியாழக்கிழமை (மாா்ச் 14) புதுச்சத்திரம் ஒன்றியம், தாத்தையங்காா்பட்டியிலும், 21-ஆம் தேதி எலச்சிபாளையம் ஒன்றியம், பெரியமணலியிலும், 28-ஆம் தேதி மல்லசமுத்திரம் ஒன்றியம், செண்பகமாதேவியிலும் காலை 9 மணி முதல் நடமாடும் வாகனம் மூலமாக மண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. விவசாயிகள் மண் மாதிரிகள் மற்றும் நீா் மாதிரிகளை நேரடியாகவும் மண் பரிசோதனை நிலையம், வசந்தபுரம் மற்றும் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் நாராயணம்பாளையத்திலும் வழங்கி ஆய்வு செய்து மண்வள அட்டை பெற்று பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com