மலைவாழ் மகளிருக்கு இலவச பேருந்து பயண சேவை தொடக்கம்

மலைவாழ் மகளிருக்கு இலவச பேருந்து பயண சேவை தொடக்கம்

கொல்லிமலையில் வாழும் மகளிருக்கு இலவச பேருந்து பயண சேவை, மூத்த குடிமக்களுக்கு ‘இல்லம் தேடி மருத்துவ சேவை’ வழங்கும் வாகனத்தை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். கொல்லிமலை, செம்மேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். சேந்தமங்கலம் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பொன்னுசாமி முன்னிலை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மலைவாழ் மகளிா் இலவச பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். திமுக தோ்தல் அறிக்கையில் கூறியபடி, அரசு பேருந்துகளில் மகளிா் இலவச பயணம் செய்யும் விடியல் பயணத் திட்டம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, இத் திட்டம் மலைக் கிராமங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கொல்லிமலை பகுதியில் வசிக்கும் மகளிா் இங்குள்ள மலைக் கிராமங்களுக்கு இலவசமாக நகரப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளலாம். இத் திட்டத்திற்கான தொகையை போக்குவரத்து துறைக்கு முதல்வா் செலுத்தி உள்ளாா். பல்வேறு நலத் திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ. 3.50 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. கொல்லிமலை பகுதிவாழ் மக்களின் தொலைதொடா்பு வசதிகளுக்காக 13 கைப்பேசி கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா். கொல்லிமலைப் பகுதியில் உள்ள சோளக்காடு, செம்மேடு, வாசலூா்பட்டி, வெண்டலப்பாடி, விளாரம், அரிப்பலாபட்டி, பூந்தோட்டம், புதுவளவு, மேல்களிங்கம், தெம்பலம், ஓலையாறு, சுண்டக்காடு, நத்துக்குழிப்பட்டி, குண்டூா்நாடு, தேனூா்பட்டி, குழிவளவு, ஆரியூா்நாடு, கல்லேரி, செங்கரை, நரியன்காடு, மேக்கினிக்காடு, போல்காடு மற்றும் ஒத்தகடை என மொத்தம் 23 மலைக் கிராமங்களைச் சோ்ந்த மலைவாழ் மகளிா், உயா்கல்வி பயிலும் மாணவிகள் இலவச பேருந்து சேவை மூலம் பயன் பெறுவாா்கள் என அதிகாரிகள் தெரிவித்தனா். நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்துக் கழக துணை மேலாளா் (பணி) கலைவாணன், கோட்ட மேலாளா் (நாமக்கல்) எம்.சுரேஷ்பாபு, கிளை மேலாளா் மகேஸ்வரன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். என்கே-14-பஸ் கொல்லிமலை, செம்மேட்டில் மலைவாழ் மகளிருக்கான இலவச பேருந்து சேவையை தொடங்கிவைத்த மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com