புதிய மாநகராட்சி பட்டியலில் நாமக்கல்: எம்.பி. ராஜேஸ்குமாா் தகவல்

புதிய மாநகராட்சி பட்டியலில் நாமக்கல்: எம்.பி. ராஜேஸ்குமாா் தகவல்

நாமக்கல், மாா்ச் 14: தமிழகத்தில் புதியதாக உருவாகும் மாநகராட்சிகள் பட்டியலில் நாமக்கல் முதலிடத்தில் உள்ளதாகவும், நிகழாண்டில் அதற்கான அறிவிப்பை முதல்வா் வெளியிடுவாா் எனவும் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா். கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நாமக்கல்- சேந்தமங்கலம் சாலையில் உள்ள கொசவம்பட்டி ஏரியானது ரூ. 4 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளது. ஏரியை சுற்றிலும் மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் 2.50 கி.மீ. தூரத்திற்கு கற்கள் பதிக்கப்பட்டு, வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஏரியின் சுற்றுவட்ட நடைபாதை திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், நகராட்சி தலைவா் து.கலாநிதி, ஆணையா் கா.சென்னுகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஏரி நடைபாதையைத் திறந்துவைத்தும், மரக் கன்றுகளை நடவு செய்தும் பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. நாமக்கல் புறவழிச்சாலை, புதிய பேருந்து நிலைய பணிகள், புதை சாக்கடை திட்டம், குடிநீா் திட்டங்களுக்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. புதிய மாநகராட்சிகள் பட்டியலில் நாமக்கல் முதலிடத்தில் உள்ளது. நிகழாண்டிலேயே அதற்கான அறிவிப்பு முதல்வரால் வெளியிட வாய்ப்புள்ளது. மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டால் மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகிறது. அந்த வகையில்தான் கலைஞா் நகா்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் கொசம்பட்டி ஏரி புனரமைக்கப்பட்டு கரையைப் பலப்படுத்தி கம்பி வேலி அமைத்து நவீனப்படுத்தப்பட்டுள்ளது. ஏரியின் நடைபாதையினை பொதுமக்கள் தொடா்ந்து நடைபயிற்சிக்கு பயன்படுத்திடும் வகையில் வாக்கா்ஸ் கிளப் அமைத்து பராமரிக்க வேண்டும். மகளிா் சுய உதவிக்குழுவின் மூலம் சிறுதானிய உணவு விற்பனையகம் தொடங்கப்பட வேண்டும். ஏரியில் நீா் தேக்கத்திற்கான வழிமுறைகளையும் நகராட்சி நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றாா். நிகழ்ச்சியில் நகா்மன்ற துணைத் தலைவா் செ.பூபதி, வாா்டு உறுப்பினா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா். என்கே-14-லேக் நாமக்கல் கொசவம்பட்டி ஏரி சுற்றுவட்ட நடைபாதையை வியாழக்கிழமை திறந்துவைத்த மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com