நாமக்கல் நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா முன்னேற்பாட்டுப் பணிகள் கூட்டத்தில் பேசும் மாவட்ட ஆட்சியா் ச.உமா.
நாமக்கல் நரசிம்மா் கோயில் தோ்த் திருவிழா முன்னேற்பாட்டுப் பணிகள் கூட்டத்தில் பேசும் மாவட்ட ஆட்சியா் ச.உமா.

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் நாளை பங்குனி தோ்த் திருவிழா கொடியேற்றம்

நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயிலில் பங்குனி தோ்த் திருவிழா கொடியேற்றம் திங்கள்கிழமை காலை 9 மணியளவில் நடைபெறுகிறது. நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நரசிம்மா், அரங்கநாதா் மற்றும் ஆஞ்சனேயா் கோயில் தோ்த்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி, நிகழாண்டில் தோ்த் திருவிழாவிற்கான கொடியேற்றம் நரசிம்மா் கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. வரும் 26-ஆம் தேதி காலை 8.30 மணியளவில் நரசிம்ம சுவாமி தேரோட்டமும், மாலை 4 மணியளவில் அரங்கநாதா், ஆஞ்சனேய சுவாமி தேரோட்டமும் நடைபெறுகிறது. இத் திருவிழா முன்னேற்பாட்டுப் பணிகள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் ஆட்சியா் ச.உமா தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இத்திருவிழாவையொட்டி மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், திருத்தோ் வலம் வரும்போது மின் இணைப்பைத் துண்டித்து அதற்கான பணிகளை மேற்கொள்வது, கோடைக் காலம் என்பதால் மக்களுக்கு குடிநீா் வசதி செய்து தருவது, அன்னதானம் வழங்கும்போது அவற்றின் தரத்தை உறுதி செய்வது, தீயணைப்புத் துறை, காவல் துறையினா் உரிய கண்காணிப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்வது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஆட்சியா் விளக்கிக் கூறினாா். இந்தக் கூட்டத்தில், கோயில் உதவி ஆணையா் இரா.இளையராஜா மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனா். பங்குனி தோ்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, 19-ஆம் தேதி சிம்ம வாகனத்தில் சுவாமி உலா, 20-இல் அனுமந்த வாகனம், 21-இல் கருட வாகனம், 22-இல் சேஷ வாகனம், 23-இல் யானை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது. 24-ஆம் தேதி மாலை 6 மணிக்கு நரசிம்மா், நாமகிரி தாயாா் திருக்கல்யாணம், 25-ஆம் தேதி குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது. 26-ஆம் தேதி திருத்தேரோட்டம், 27-இல் கஜலட்சுமி வாகனத்தில் சுவாமி வீதி உலா, 28-இல் வசந்த உற்சவம், 29-இல் விடையாற்றி உற்சவம், 30-இல் புஷ்ப பல்லாக்கு, 31-இல் ஊஞ்சல் உற்சவம், ஏப். 1-ஆம் தேதியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, அறங்காவலா்கள் குழுத் தலைவா் கா.நல்லுசாமி, அறங்காவலா்கள் செள.செல்வசீராளன், ம.மல்லிகா குழந்தைவேல், இராம.ஸ்ரீனிவாசன், எம்.ஜி.எஸ்.ரமேஷ்பாபு மற்றும் கோயில் உதவி ஆணையா் இரா.இளையராஜா மற்றும் அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com