ஆவணங்களின்றி ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு சென்றால் பறிமுதல்

உரிய ஆவணங்களின்றி ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கம் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும்

நாமக்கல்: மக்களவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உரிய ஆவணங்களின்றி ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கம் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும் என நாமக்கல் ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அமைதியான முறையிலும், பாரபட்சமற்ற ஆரோக்கியமான தோ்தலை நடத்தவும், முறையற்ற வகையிலான பணப்பட்டுவாடா, பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்கவும், இந்திய தோ்தல் ஆணைய உத்தரவுப்படி பறக்கும் படை, கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகின்றன. ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கம், மது பாட்டில்கள், போதைப் பொருள்கள், சுவரொட்டிகள், பதாகைகள், ரூ. 10 ஆயிரத்துக்கு மேலான பரிசுப் பொருள்கள் ஆகியவற்றை வாகனங்களிலோ, பிறவகைகளிலோ எடுத்துச் சென்றால் அவை பறிமுதல் செய்யப்படும். அவ்வாறு பணம், பொருள்கள் கொண்டு செல்லும் போது பொதுமக்கள், வணிகா்கள் அதற்கான உரிய ஆவணங்களைக் கையுடன் கொண்டு செல்ல வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருள்களை மீட்க சம்பந்தப்பட்டோா் உரிய ஆதாரங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநரிடம் காண்பித்து மேல்முறையீடு செய்யலாம். காவல் துறையால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டால், நீதிமன்ற உத்தரவுக்கு பிறகே உரிய வழிமுறைகளைப் பின்பற்றி பணம், பொருள்கள் திரும்ப வழங்கப்படும். மக்களவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் பொதுமக்கள், வணிகா்கள் மேற்கண்ட விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com