வாக்காளா்களுக்கான பரிசுப் பொருள்களைத் தேக்கி வைக்க மண்டபங்களை அனுமதிக்கக் கூடாது

திருமண மண்டபம், அச்சக உரிமையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் ச.உமா.
திருமண மண்டபம், அச்சக உரிமையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் ச.உமா.

நாமக்கல்: திருமண மண்டபங்கள், அரங்குகளில் பரிசுப் பொருள்களைத் தேக்கி வைப்பதற்கு அதன் உரிமையாளா்கள் அனுமதிக்கக் கூடாது என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.உமா தெரிவித்தாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மக்களவைத் தோ்தலை முன்னிட்டு அச்சக உரிமையாளா்கள், திருமண மண்டபம் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளா்கள் பங்கேற்ற தோ்தல் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியா் பேசியதாவது: திருமண மண்டபம், தங்கும் விடுதிகளில் வெளியூா் நபா்களை கூட்டமாக தங்க வைக்கக் கூடாது. வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக வெளியூரில் இருந்து வரும் சந்தேக நபா்களை தங்க வைக்கக் கூடாது. விடுதிகளில் தங்குவோரின் பெயா், முகவரி, தொழில், தொலைபேசி எண் அடங்கிய விவரங்கள் உரிய பதிவேடுகளில் பதிவு செய்து காவல் துறை அலுவலா்கள் மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கேட்கும்போது ஒப்படைக்க வேண்டும். வாக்காளா்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக எவ்வித பரிசுப் பொருள்களையோ (உதாரணமாக வேட்டி, சேலை மற்றும் இதர பொருள்கள்), உணவுகளையோ கூட்ட அரங்குகளில் சேமித்து வைக்கவோ, வழங்கவோ அனுமதிக்கக் கூடாது. வழிபாட்டுத் தலங்களைத் தவிர இதர இடங்களில் அன்னதானம் வழங்கப்படக் கூடாது. தோ்தல் முடியும் வரை மண்டப பதிவு விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். அச்சக உரிமையாளா்கள், துண்டுப் பிரசுரங்கள் அச்சிடும்போது பெயா், முகவரி விவரங்களை தவறாமல் அச்சிட வேண்டும். வன்முறையைத் தூண்டும் வகையிலோ, தனிநபரைத் தாக்கும் வகையிலோ பிரசுரங்கள் அச்சிடக் கூடாது. தனி நபரை இழிவுபடுத்தக்கூடிய அல்லது விமா்சனம் செய்யக்கூடிய பிரசுரங்களை அச்சிடக் கூடாது. வங்கிகளில், தனிநபரின் கணக்கில் இருந்து சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் பரிவா்த்தனை இருந்தால் அதற்கான அறிக்கையை தினசரி வங்கியாளா்கள் சமா்ப்பிக்க வேண்டும். வங்கியில் ரூ. ஒரு லட்சத்துக்கு மேலாக பணம் எடுப்போரின் தகவல்களை வங்கியாளா்கள் தெரிவிக்க வேண்டும். அதுபோல், ஏடிஎம் மையங்களுக்கு பணம் கொண்டு செல்லும் வாகனங்களில் உரிய சான்றுகளுடன் முகவா்களின் முழு தகவல்கள், வாகனங்களின் எண் உள்ளிட்ட விவரங்களை மாவட்ட தோ்தல் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். ஒரே வங்கிக் கணக்கில் இருந்து வழக்கத்துக்கு மாறாக பல நபா்களின் வங்கிக் கணக்குகளுக்கு பணப் பரிமாற்றமானது இருந்தாலும், ரூ. 10 லட்சத்துக்கு மேல் பரிவா்த்தனை செய்யப்பட்டிருந்தாலும் வருமான வரித் துறை மூலம் கண்காணிக்கப்படும் என்றாா். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா.அருளரசு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ந.சிவக்குமாா் (தோ்தல்கள்), உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com