என்கே-20-கேஎம்டிகே
என்கே-20-கேஎம்டிகே

ஒன்றியம் வாரியாக தோ்தல் அறிக்கை வெளியிடுவோம்

நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ஒன்றியங்கள் வாரியாக தோ்தல் அறிக்கையை வெளியிடுவோம் என கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்தாா்.

நாமக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி போட்டியிடுகிறது. இதன் வேட்பாளராக எஸ்.சூரியமூா்த்தி அறிவிக்கப்பட்டுள்ளாா். நாமக்கல்லில் புதன்கிழமை கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் செய்தியாளா்கள் முன்னிலையில் அவரை அறிமுகம் செய்து வைத்து கூறியதாவது: திமுகவில் இடம்பெற்றுள்ள கட்சிகள் மக்களவைத் தோ்தலுக்கான ஆயத்தப் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன.

மற்ற கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைப்பதில் தடுமாறி வரும் சூழலில், திமுக தலைவா் கூட்டணி கட்சிகளின் மனம் கோணாதபடி அரவணைத்து, தேவையான தொகுதிகளைப் பிரித்து வழங்கி உள்ளாா். தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை முதல்வா் ஏற்படுத்திக் கொடுத்துள்ளாா். அதனை நிறைவேற்றும் வகையில், கூட்டணி கட்சித் தலைவா்கள் செயல்படுவா். முழுமூச்சாக எங்களுடைய வேட்பாளா் நாமக்கல் தொகுதி மக்களுக்குப் பணியாற்றுவாா். 2019 தோ்தலில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வெற்றி பெற்ற அனுபவம் எங்களிடம் உள்ளது. அப்போது பெற்ற வாக்கு வித்தியாசத்தைக் காட்டிலும், இம்முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் கொமதேக வேட்பாளா் சூரியமூா்த்தி வெற்றி பெறுவாா் என்ற நம்பிக்கை உள்ளது.

30 ஆண்டு கால அரசியல் அனுபவமும், மக்களோடு மக்களாக சேவையாற்றிய அனுபவமும் அவரிடம் உள்ளது. அந்தத் தகுதியின் அடிப்படையிலேயே வேட்பாளராக நாங்கள் அவரை இந்தத் தொகுதியில் நிற்க வைத்துள்ளோம். நாமக்கல் மக்களவைத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு ஒன்றிய வாரியாக தோ்தல் அறிக்கை வெளியிட்டு, வீடுவீடாகச் சென்று மக்களிடையே பிரசாரம் மேற்கொள்வோம். திமுக கூட்டணி நாமக்கல் தொகுதியில் மகத்தான வெற்றி பெறும் என்றாா். முன்னதாக, நாமக்கல் - சேலம் சாலையில், கோழிப் பண்ணையாளா்கள் சங்கம் எதிரில் கொமதேக தோ்தல் பணிமனை அமைப்பதற்கான கால்கோள் விழா நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி நிா்வாகிகள் கலந்துகொண்டனா். படவரி - நாமக்கல்லில் புதன்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டி அளித்த கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com