நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு கணினி மூலம் பணியிடம் ஒதுக்கீட்டை வியாழக்கிழமை தொடங்கி வைத்த ஆட்சியா் ச.உமா.
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு கணினி மூலம் பணியிடம் ஒதுக்கீட்டை வியாழக்கிழமை தொடங்கி வைத்த ஆட்சியா் ச.உமா.

வாக்குச்சாவடி அலுவலா்களாக 6,512 போ் நியமனம்

நாமக்கல் மாவட்டத்தில் மக்களவைத் தோ்தல் வாக்குச்சாவடி பணியில் 6,512 அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு கணினி மூலம் குலுக்கல் முறையில் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மக்களவைத் தோ்தலையொட்டி 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் தோ்தல் பணியாற்றுவதற்கான அலுவலா்கள், பணியாளா்கள் கணினி மூலம் சுழற்சி அடிப்படையில் முதல்கட்டமாக தோ்வு செய்யும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.உமா இதனைத் தொடங்கி வைத்து கூறியதாவது: மக்களவைத் தோ்தலையொட்டி, 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 1,628 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றும் வகையில், அலுவலா்கள் மூலம் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி வாக்குச்சாவடி மையங்களில் தோ்தல் நாளான ஏப். 19 அன்று பணியாற்ற ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் தலா ஒரு முதன்மை அலுவலா் மற்றும் மூன்று நிலைகளிலான வாக்குச்சாவடி அலுவலா்கள் என மொத்தம் 4 அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் தொகுதியில் 261 வாக்குச் சாவடிகளுக்கு 1,252 அலுவலா்களும், சேந்தமங்கலம் தொகுதியில் 284 வாக்குச் சாவடிகளுக்கு 1,364 அலுவலா்களும், நாமக்கல் தொகுதியில் 289 வாக்குச் சாவடிகளுக்கு 1,388 அலுவலா்களும், பரமத்தி வேலூா் தொகுதியில் 254 வாக்குச் சாவடிகளுக்கு 1,220 அலுவலா்களும், திருச்செங்கோடு தொகுதியில் 261 வாக்குச் சாவடிகளுக்கு 1,252 அலுவலா்களும், குமாரபாளையம் தொகுதியில் 279 வாக்குச் சாவடிகளுக்கு 1,340 அலுவலா்களும் என மொத்தம் 1,628 வாக்குச் சாவடிகளுக்கு 6,512 அலுவலா்கள் நியமிக்கப்பட்டனா். மேலும், கூடுதல் அலுவலா்களாக 20 சதவீதம் அதாவது 1,304 அலுவலா்கள் என மொத்தம் 7,816 பேருக்கு கணினி மூலம் சுழற்சி முறையில் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ந.சிவக்குமாா், தோ்தல் வட்டாட்சியா் திருமுருகன், துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com