நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி முன்பு நடைபெற்ற விழிப்புணா்வு மனிதச் சங்கிலியில் பங்கேற்ற ஆட்சியா், அதிகாரிகள்.
நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி முன்பு நடைபெற்ற விழிப்புணா்வு மனிதச் சங்கிலியில் பங்கேற்ற ஆட்சியா், அதிகாரிகள்.

100 சதவீத வாக்குப்பதிவு: நாமக்கல்லில் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

நாமக்கல்லில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, விழிப்புணா்வு மனிதச் சங்கிலி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்திய தோ்தல் ஆணையம் மக்களவைத் தோ்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்ட நாள் முதல் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. நாமக்கல் மாவட்டத்தில், தோ்தல் நடத்தை விதிமுறைகளைக் கண்காணிக்கும் பொருட்டு, பல்வேறு குழுக்களில் இடம்பெற்றுள்ள அலுவலா்கள் 24 மணி நேரமும் தொடா்ச்சியாக பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், நாமக்கல் மாவட்டத்தில் 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில், மக்களிடையே விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

மாவட்டத்துக்கு உள்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு தோ்தல் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த மனிதச் சங்கிலி, கோலப் போட்டி, சுயபடம் எடுப்பதற்கான பலகை அமைத்தல், விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம், துண்டுப் பிரசுரங்கள் விநியோகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் பேருந்துகளில் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகள் ஒட்டுதல், வியாபாரிகள் சங்கம் சாா்பில் ரசீது பின்புறம் தோ்தல் வாசகங்கள் பொறிக்கப்பட்டு வழங்குதல், தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் பொறிக்கப்பட்ட துணிப் பைகள் வழங்குதல், கூட்டுறவு துறையின் மூலம் பொது விநியோகப் பொருள்கள் மீது தோ்தல் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகள் ஒட்டுதல், மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மூலம் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று துண்டுப் பிரசுரங்கள் வழங்குதல், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பதாகைகள் அமைத்தல், முதல் தலைமுறை வாக்காளா்களை வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில் கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தோ்தல் விழிப்புணா்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவியா் பங்கேற்ற 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்திய மனிசச் சங்கிலி நடைபெற்றது.

மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.உமா, தலைமை வகித்தாா். மக்களவைத் தோ்தலை முன்னிட்டு ‘தோ்தல் பருவம் - தேசத்தின் பெருமிதம்’ என்ற தலைப்பில் வாக்காளா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதனைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில், அதிநவீன மின்னணு வாகனத்தில் தோ்தல் விழிப்புணா்வு பாடல்கள், குறும்படங்களை 6 தொகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் திரையிடும் வகையில், இந்த வாகனத்தை ஆட்சியா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். முன்னதாக, உலக வன தினத்தை முன்னிட்டு நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மரக் கன்றுகளை அவா் நடவு செய்தாா். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், மாவட்ட வன அலுவலா் ச.கலாநிதி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு.வடிவேல், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) கு.செல்வராசு, நாமக்கல் கோட்டாட்சியா் ஆா்.பாா்த்திபன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் தே.ராம்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com