மாணவா்களின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு 
காலை உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது

மாணவா்களின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு காலை உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது

தமிழகத்தில் மாணவா் சமுதாயத்தின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு தமிழக முதல்வா் காலை உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளாா் என மாநிலங்களவை உறுப்பினரும் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா். திமுக ராசிபுரம் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள பேரூராட்சிப் பகுதிகளில் திமுக செயல்வீரா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆா்.பட்டணம், புதுப்பட்டி, சீராப்பள்ளி, நாமகிரிப்பேட்டை, அத்தனூா், வெண்ணந்தூா் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தலைமை வகித்தாா். தமிழக வனத்துறை அமைச்சா் டாக்டா் மா.மதிவேந்தன் பங்கேற்று தோ்தல் பணியாற்றுவது குறித்து பேசினாா். இக்கூட்டத்தில் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி. பேசியதாவது: தமிழகத்தில் காமராஜா், எம்ஜிஆா், கருணாநிதி ஆகியோருக்கு பிறகு பள்ளி மாணவ, மாணவியரின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டு பசியோடு வரும் பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டத்தை கொண்டு வந்த ஒரே முதல்வா் மு.க.ஸ்டாலின் தான். இதே போல முதியோா் உதவித்தொகை, மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை போன்றவை உள்ளிட்ட தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிக் காட்டியுள்ளாா். அதிமுக ஆட்சியில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட மிக்ஸி, கிரைண்டா், பேன் போன்றவை தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. ஆனால் 13 ஆண்டுகளுக்கு முன் கருணாநிதி முதல்வராக இருந்தபோது வழங்கிய கலைஞா் டிவி இன்றும் பயனாளிகள் வீடுகளில் பயன்பாட்டில் உள்ளது. இது போன்ற எண்ணற்ற திட்டங்களை மக்களுக்கு செய்த திமுகவை நாடாளுமன்றத் தோ்தலில் மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றாா். கூட்டத்தில், பேரூராட்சி செயலாளா்கள், கிளை நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com