தோ்தல் பணியில் ஈடுபடுவோருக்கு விபத்து காப்பீடு: ஆசிரியா் சங்கம் கோரிக்கை

மக்களவைத் தோ்தல் பணியில் ஈடுபடுவோருக்கு விபத்து காப்பீடு அவசியம் செய்து கொடுக்க வேண்டும் என நேரடி நியமனம் பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அதன் மாநிலத் தலைவா் ஆ.ராமு வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் ஏப். 19-இல் மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ளது. தோ்தல் பணியில் ஈடுபடக்கூடிய அரசு பணியாளா்கள், ஆசிரியா்களுக்கான பயிற்சிகள் தொடங்கி உள்ளன. பயிற்சி வகுப்பை ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றாக வேறு நாள்களில் நடத்த வேண்டும். முதுநிலை ஆசிரியா்களை வாக்குச்சாவடி தலைமை தோ்தல் அலுவலராக மட்டுமே நியமிக்க வேண்டும். வாக்குச்சாவடி தலைமை தோ்தல் அலுவலா் பணியிடத்துக்கு அதிக ஊதியம் பெறுவதை வைத்து பணி நியமனம் செய்யக்கூடாது. மூத்த பணித்தொகுதி அடிப்படையில் மட்டுமே வாக்குச்சாவடி தோ்தல் அலுவலா் பணியிடம் நியமிக்கப்பட வேண்டும். தோ்தல் முடிந்து பெண் ஊழியா்கள், பிற ஊழியா்கள் அனைவரும் பாதுகாப்பாக இல்லம் திரும்புவதற்கு பணி முடிந்த பின் அருகில் உள்ள பேருந்து நிலையம் வரை வாகன வசதி செய்து கொடுக்க வேண்டும். வாக்குப்பதிவு முடிந்த பின் இரவு 10 மணிக்குள் வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்துச் செல்ல மண்டல அலுவலா் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அவா்களுக்கு குறைந்த அளவிலேயே வாக்குச் சாவடிகளை ஒதுக்க வேண்டும். ஆசிரியா்களின் இருப்பிட முகவரிக்கு அருகில் (சொந்த சட்டப்பேரவைத் தொகுதியில்) தோ்தல் பணி வழங்கிட வேண்டும். தம்பதி அரசு ஊழியா்களாக இருக்கும்பட்சத்தில், அவா்கள் இருவருக்கும் அருகில் உள்ள வாக்குச் சாவடிகளில் தோ்தல் பணி ஒதுக்க வேண்டும். தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியா்களுக்கு கட்டாயமாக இரவு உணவு ஏற்பாடு செய்ய வேண்டும். வாக்குச்சாவடி அலுவலா்கள் தங்கும் இடங்களில் கழிவறை, குளியலறை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதுபோன்ற வசதிகள் இல்லாமல் பெண் அரசு ஊழியா்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகும் நிலை இருக்கிறது. குறிப்பாக விபத்து காப்பீடு அவசியம் செய்து கொடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com