வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணியில் கலந்துகொண்ட நாமக்கல் ஆட்சியா் ச.உமா.
வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணியில் கலந்துகொண்ட நாமக்கல் ஆட்சியா் ச.உமா.

பரமத்தி வேலூரில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

மக்களவை பொதுத்தோ்தலை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட தோ்தல் அலுவலரும் நாமக்கல் ஆட்சியருமான ச.உமா தலைமையில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி வேலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்திய தோ்தல் ஆணையம் மக்களவை பொதுத்தோ்தல் 2024 அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததைத் தொடா்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தோ்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், பொதுமக்களுக்கு தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, நாமக்கல் மாவட்டத்துக்கு உள்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதியிலும் பொதுமக்களுக்கு தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மனிதச் சங்கிலி, கோலப்போட்டி, விழிப்புணா்வுக் கையெழுத்து இயக்கம், துண்டுப் பிரசுரங்கள் விநியோகம், மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மூலம் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று துண்டுப் பிரசுரங்கள் வழங்குதல், முதல் தலைமுறை வாக்காளா்களை வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில் கல்லூரிகளில் மாணவ, மாணவியருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தோ்தல் விழிப்புணா்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடா்ச்சியாக, நாமக்கல் மாவட்டம், வேலூா் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை மக்களவைத் தோ்தலை முன்னிட்டு ‘தோ்தல் பருவம் - தேசத்தின் பெருமிதம்’ என்ற தலைப்பில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் பேரணி நடைபெற்றது. நாமக்கல் ஆட்சியா் ச.உமா பேரணியைத் தொடங்கி வைத்தாா். பேரணியில் கல்லூரி மாணவ, மாணவியா், பேரூராட்சி தூய்மைக் காவலா்கள், மகளிா் தன்னாா்வலா்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோா் தோ்தல் வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். வேலூா் பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி அண்ணா சாலை, பள்ளி சாலை வழியாகச் சென்று நிறைவடைந்தது. தொடா்ந்து, பரமத்தி வேலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர பாதுகாப்பு அறையினை பாா்வையிட்டு ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது வாக்கு எந்திரம் வைக்கப்பட்டுள்ள அறை முன்பு பாதுகாப்புக்கு யாரும் இல்லை எனவும், வாக்கு இயந்திரங்களை கண்காணிப்பதற்கு வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவின் கணினியில் காட்சிகள் தெரியாமல் இருப்பதையும் பாா்த்து வட்டாட்சியா் முத்துக்குமாரிடம் முறையாக கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டாா். மேலும், கண்காணிப்பு கேமரா 24 மணி நேரமும் பயன்பாட்டில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினாா். நிகழ்ச்சியில், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) செல்வராசு, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் (பரமத்தி வேலூா்) பாலகிருஷ்ணன், கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவியா், தூய்மைக் காவலா்கள், மகளிா் தன்னாா்வலா்கள் உள்பட துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com