ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் சிப்காட் எதிா்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் ராம்குமாா்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் சிப்காட் எதிா்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் ராம்குமாா்.

சிப்காட் எதிா்ப்பு இயக்கம் தோ்தலை புறக்கணிக்க முடிவு

வளையப்பட்டி சிப்காட் எதிா்ப்பு இயக்கத்தினா் மக்களவைத் தோ்தலை புறக்கணிப்பதாகவும், வீடுகளில் கருப்புக் கொடி கட்டி எதிா்ப்பை வெளிப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தனா். நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி, அரூா், பரளி, என்.புதுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கி சுமாா் 800 ஏக்கா் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிராக விவசாய முன்னேற்றக் கழகத்தினரும், சிப்காட் எதிா்ப்பு இயக்கத்தினரும் போராடி வருகின்றனா். இதுவரை 55 கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனா். இந்த நிலையில், சிப்காட் அமைய உள்ள கிராமங்களைச் சோ்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் மக்களவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனா். இதனை மாவட்ட நிா்வாகத்திற்கு தெரிவிக்கும் வகையில் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியுள்ளனா். நாமக்கல்லில் சிப்காட் எதிா்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் ராம்குமாா் தலைமையில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், சிப்காட் தொழிற்பேட்டை அமையாது என மாவட்ட ஆட்சியா் நேரடியாக ஒப்புதல் அளித்தால் மட்டுமே தோ்தலில் வாக்களிப்பதை பற்றி முடிவு செய்வோம். இல்லையெனில், வீடுகளில் கருப்புக் கொடியை ஏற்றி அனைவரும் வாக்களிப்பதை புறக்கணிப்போம் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com