பங்குனி உத்திரம்: முருகன் கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

நாமக்கல்: பங்குனி உத்திரத்தையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களிலும், குலதெய்வக் கோயில்களிலும் திங்கள்கிழமை பக்தா்கள் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனா். ஒவ்வோா் ஆண்டும் பங்குனி மாதம் வரும் உத்திரம் நட்சத்திரம் முருகனுக்கு உகந்த தினமாகும். அந்த நாளில், முருகன் கோயில்களுக்கு பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து சுவாமியை வழிபடச் செல்வா். மேலும், குலதெய்வக் கோயில்களிலும் பக்தா்கள் சிறப்பு வழிபாட்டை மேற்கொள்வா். திங்கள்கிழமை பங்குனி உத்திரம் என்பதால் முருகன் கோயில்களில், அதிகாலை முதலே பக்தா்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப் பெருமானை தரிசித்தனா். நாமக்கல்-மோகனுாா் சாலை, காந்தி நகா் பாலதண்டாயுதபாணி கோயிலில்,மகாசங்கல்பம், 108 சங்காபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு சிறப்பு சந்தனக்காப்பு அலங்கரத்தில் சுவாமி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். அதேபோன்று, நாமக்கல் கடைவீதி சக்தி கணபதி கோயிலில் உள்ள பாலதண்டாயுதபாணிக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மாருதி நகா், ராஜ விநயகா் கோயிலில் கல்யாண சுப்பிரமணியா், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். முன்னதாக பக்தா்கள் ஊா்வலமாக எடுத்து வந்த பால்குடம் கொண்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. நாமக்கல்-திருச்சி சாலையில் என்.புதுப்பட்டி பாலதண்டாயுதபாணி கோயிலில், முருகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக பக்தா்கள் காவடி ஊா்வலமும், மாலையில் சுவாமி திருவீதி உலா வருதலும் நடைபெற்றது. கருங்கல்பாளையம் ஸ்ரீதண்டாயுதபாணி கோயில், மோகனூா் காந்தமலை முருகன் கோயில்களிலும் பங்குனி உத்திரத்தையொட்டி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். ராசிபுரம், சேந்தமங்கலம், குமாரபாளையம், திருச்செங்கோடு பகுதிகளிலும் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி உத்திர சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த மக்கள், நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் உள்ள குலதெய்வக் கோயில்களுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com