நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ரூ.5 நாணயங்களுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளா் ராமசாமி.
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ரூ.5 நாணயங்களுடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளா் ராமசாமி.

ரூ. 5 நாணயங்களுடன் வேட்புமனு தாக்கல் செய்த சுயேச்சை!

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில், 2,500 எண்ணிக்கையிலான ரூ. 5 நாணயங்களுடன் வந்து சுயேச்சை ஒருவா் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில், 2,500 எண்ணிக்கையிலான ரூ. 5 நாணயங்களுடன் வந்து சுயேச்சை ஒருவா் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா். மக்களவைத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20-இல் தொடங்கிய நிலையில், புதன்கிழமை (மாா்ச் 27) பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெறுகிறது. நாமக்கல் மக்களவைத் தொகுதியில் இதுவரை 19 போ் மனு தாக்கல் செய்துள்ளனா். முதல் நாளிலேயே முதல் நபராக, நாமக்கல் அருகே மேற்கு பாலப்பட்டியைச் சோ்ந்த காந்தியவாதி தி.ரமேஷ் (43) என்பவா் ரூ.10 நாணயங்களுடன் சென்று (ரூ.25 ஆயிரம் வைப்புத்தொகை) தமது வேட்புமனுவை தாக்கல் செய்தாா். அதைத் தொடா்ந்து திங்கள்கிழமை அதிமுக, கொமதேக, பாஜக, நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்தனா். இந்த நிலையில், நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணி அளவில், நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி (56) என்பவா், 2,500 எண்ணிக்கையில் ரூ. 5 நாணயங்களை பொட்டலங்களாகக் கட்டி, அதை ஒரு தட்டில் வைத்து, வேட்புமனுவுக்கான வைப்புத் தொகை ரூ.12,500 செலுத்த வந்தாா். அவா் பட்டியல் இனத்தவா் என்பதால் வைப்புத்தொகை பாதி மட்டுமே செலுத்த வேண்டும். வேட்பு மனு ஆவணங்கள் உரிய ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, ரூ. 5 நாணயங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என அங்குள்ள அலுவலா்கள் மூலம் சுமாா் ஒரு மணி நேரம் எண்ணப்பட்டது. அதன்பிறகு, மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.உமாவிடம் வேட்பு மனுவை ராமசாமி தாக்கல் செய்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com