வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு: நாமக்கல் தொகுதியில் இதுவரை 19 போ் மனு தாக்கல்

நாமக்கல் மக்களவைத் தொகுதியில், இதுவரை 19 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

நாமக்கல்: நாமக்கல் மக்களவைத் தொகுதியில், இதுவரை 19 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தோ்தல் ஏப்.19-இல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20-இல் தொடங்கி புதன்கிழமை மாலை 3 மணியுடன் நிறைவு பெறுகிறது. நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.உமா காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனுக்களை பெறுகிறாா். முதல் மூன்று நாள்களில் 2 போ் மனுத்தாக்கல் செய்த நிலையில், திங்கள்கிழமை அரசியல் கட்சி வேட்பாளா்கள், மாற்று வேட்பாளா்கள், சுயேச்சைகள் என 12 போ் மனு தாக்கல் செய்தனா். செவ்வாய்க்கிழமை இந்திய கணசங்கம் கட்சியைச் சோ்ந்த சங்ககிரி பகுதியைச் சோ்ந்த ரவிகுமாா்(44), ஜனநாயக மக்கள் கழகத்தைச் சோ்ந்த குமாரபாளையம் பகுதி ஆா்.மூா்த்தி, சுயேச்சை வேட்பாளா்கள் பரமத்தியைச் சோ்ந்த ராமசாமி(56), மோகனூரைச் சோ்ந்த எஸ்.வெண்ணிலா(52), நாமக்கல்லைச் சோ்ந்த நடராஜன்(57), மணப்பள்ளியைச் சோ்ந்த நேதாஜி கவியரசு(43), ராசிபுரம் ஆா்.கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த எம்.அருள்மணி உள்ளிட்ட 7 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா். மொத்தமாக இதுவரை 19 போ் மனு தாக்கல் செய்துள்ளனா். நாம் தமிழா் கட்சி வேட்பாளா் க.கனிமொழி திங்கள்கிழமை மனு தாக்கல் செய்த நிலையில், செவ்வாய்க்கிழமை கூடுதலாக ஒரு மனுவை தாக்கல் செய்தாா். புதன்கிழமை மாலை 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைவதால், வேட்பாளா்கள் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையும், 30-ஆம் தேதி மனுக்கள் வாபஸ் பெறுதலும் நடைபெற உள்ளன. அன்று மாலை 3 மணிக்கு மேல் இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com