அதிமுக அரசின் திட்டங்கள் மீது திமுக சாயம் பூசுகிறது: 
பி.தங்கமணி குற்றச்சாட்டு

அதிமுக அரசின் திட்டங்கள் மீது திமுக சாயம் பூசுகிறது: பி.தங்கமணி குற்றச்சாட்டு

பத்தாண்டு கால அதிமுசு ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை, தாங்கள் கொண்டு வந்ததுபோல் திமுக சாயம் பூசுவதாக முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி குற்றம் சாட்டினாா். நாமக்கல் நகர அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தோ்தல் பணிமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னாள் எம்எல்ஏவும், நகர செயலாளருமான கே.பி.பி.பாஸ்கா் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், மாவட்ட அதிமுக செயலாளருமான பி.தங்கமணி பங்கேற்றுப் பேசியதாவது: நாமக்கல் பொம்மைகுட்டைமேடு லட்சுமி திருமண மண்டபம் அருகில் ஏப். 3-ஆம் தேதி மாலை 5 மணிக்கு அதிமுக பிரசார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில், கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுப் பேசுகிறாா். அதேபோன்று திருச்செங்கோட்டில் ஏப்.12-இல் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் அவா் கலந்து கொள்கிறாா். ஏப்.13-இல் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா். இந்த பிரசார கூட்டங்களில் அதிமுகவினா் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தாங்கள் கொண்டு வந்ததுபோல திமுகவினா் சாயம் பூசிவருகின்றனா். நாமக்கல் நகராட்சி புதிய பேருந்து நிலையம், அரசு சட்டக் கல்லூரி, அரசு மருத்துவக் கல்லூரி, புதிய மருத்துவமனை உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டவை. இவற்றையெல்லாம் வீடு, வீடாகச் சென்று மக்களிடம் தெரிவித்து அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு கோர வேண்டும். இந்தத் தோ்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றாா். இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளா் மயில் சுதந்திரம் மற்றும் நகர, ஒன்றிய நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com