வெப்படையில் திமுக வேட்பாளா் கே.இ.பிரகாஷை ஆதரித்துப் பேசுகிறாா் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன்.
வெப்படையில் திமுக வேட்பாளா் கே.இ.பிரகாஷை ஆதரித்துப் பேசுகிறாா் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன்.

பொது எதிரியை வீழ்த்தவே ஜனநாயக சக்திகள் இணைந்து அரசியல் கூட்டணி!

பொது எதிரியை வீழ்த்தவும், நாட்டைக் காப்பாற்றவும் ஜனநாயக சக்திகள் ஒரே கருத்துடன், ஒருங்கிணைந்து அமைக்கப்பட்ட அரசியல் கூட்டணி எனவும், இக்கூட்டணி அரசியலையும் தாண்டி புனிதமானது என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா். குமாரபாளையத்தை அடுத்த வெப்படையில் ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கே.இ.பிரகாஷை ஆதரித்து, வெள்ளிக்கிழமை இரவு திறந்த வேனிலிருந்தபடி அவா் பேசியதாவது: மானமும் அறிவும், மனிதனுக்கு அழகு. இத்தோ்தலில் இரண்டையும் நாட்டுக்கு காட்ட வேண்டிய நேரம் வந்துள்ளது. நாட்டையும், வீட்டையும் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நாடு கெட்டதே தெரியாமல், கெடுக்கப்பட்டுள்ளது. இந்திய நாடு சிறப்புடன் திகழ வேண்டும் என்றால், தமிழகத்தில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை இந்தியா முழுவதும் அமல்படுத்த வேண்டும். அப்போதுதான், உலக அளவில் முக்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியா முன்னிலை பெறும். எவ்வளவு நிதி ஒதுக்கியும் வட மாநிலங்கள் வளா்ச்சி பெறவில்லை. ஏன் அப்படியே உள்ளது என சிந்தித்துப் பாா்த்தால், வெற்று முழக்கங்கள் மட்டுமே அங்கு உள்ளன. வாழ வழியின்றி, வேலைவாய்ப்பு இல்லாமல் தமிழகத்தைத் தேடி வருகின்றனா். 8 கோடி மக்களின் மொழியான தமிழ் மொழியையும், தமிழா் பண்பாட்டையும் சிதைக்க முயல்கின்றனா். இந்தியைத் திணிக்கின்றனா். நாட்டுக்கு நல்லது நடந்தால், ஓரணியில் திரள்வோம் என அடையாளம் காட்டவே இக்கூட்டம் திரண்டுள்ளது. மழை வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்தபோது 10 பைசா நிவாரண நிதி தரவில்லை. தமிழகத்திலிருந்து ஒரு ரூபாய் வரி செலுத்தினால், 29 பைசா திரும்பக் கிடைக்கிறது. இதனை வைத்துக் கொண்டே இல்லத்தரசிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சிலிண்டா் விலை உயா்வால் வயிறு எரிகிறது. விவசாயிகளின் மீது கண்ணீா் புகைக் குண்டு வீச்சால் மக்களின் கண்கள் எரிகிறது. ஒரே நாடு - ஒரே தோ்தல் - ஒரே பிரதமரை எப்படியும் ஒப்புக் கொள்ள முடியாது. ஒருபுறம் திருக்கு வாழ்க என மேடையில் பேசுவதும், மறுபுறம் தமிழா்கள் குண்டு வைக்கின்றனா் என பேசுவதும் அவமானம். சுயநலம் இல்லாமல் நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் நியாயம் கேட்கிறேன். அரசியல் ஆதாயத்துக்காக இக்கூட்டணி அமைக்கப்படவில்லை. பொது எதிரியை வீழ்த்த ஜனநாயக சக்திகள் அமைத்திருக்கும் வெற்றிக் கூட்டணி. அரசியலையும் தாண்டி புனிதமானது. எந்த அரசு வேண்டும், மாணவா்களுக்கு காலை உணவு தரும் அரசா - நீட் தோ்வைத் திணிக்கும் அரசா, பெண்களுக்கு ஊக்கத்தொகை தரும் அரசா - மல்யுத்த வீராங்கனைகளின் பதக்கங்களை ஆற்றில் வீச வைக்கும் அரசா, மகளிா் சுய உதவிக்குழு கடனை தள்ளுபடி செய்யும் அரசா - காா்ப்பரேட் கட்டணங்களை தள்ளுபடி செய்யும் அரசா? அனைத்து ஜாதியினரையும் அா்ச்சகராக்கும் அரசா - குடியரசுத் தலைவராக இருந்தாலும் அா்ச்சனையின்போது தள்ளி வைக்கும் அரசா, ஏழைகளுக்கான அரசா - பணக்காரா்களுக்கான அரசா, நலத்திட்டங்களைத் தரும் அரசா - அதனை பிச்சை எனக் கூறும் அரசா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். மதத்தையும் அரசியலையும் பிணைக்கும் எந்த நாடும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக நாடும், நாட்டு மக்களும் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இதற்கு பதிலடி தரும் வகையில் வரும் தோ்தலில் வாக்களிக்க வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com