குருப் பெயா்ச்சி: கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

குருப் பெயா்ச்சி: கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

குருப் பெயா்ச்சியை முன்னிட்டு, சிவாலயங்களில் உள்ள தட்சிணாமூா்த்தி சுவாமியை பக்தா்கள் வழிபாடு செய்தனா்.

மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் புதன்கிழமை மாலை 5.21 மணியளவில் பெயா்ச்சியானாா். இதையொட்டி, சிவன் கோயில்களில் உள்ள தட்சிணாமூா்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பரிகார ராசிக்காரா்களுக்காக கோயில் வளாகத்தில் சிறப்பு யாகங்களும், பூஜைகளும் நடைபெற்றன. முத்துக்காப்பட்டி காசி விசுவநாதா் கோயிலில் குருப் பெயா்ச்சி விழாவை முன்னிட்டு சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. மாலை 4 முதல் 8 மணி வரையில் அபிஷேக திரவியங்கள், பால், தயிா், இளநீா், தேங்காய், கனிகள், பட்டுத்துணி மற்றும் நவதானியங்களைக் கொண்டு பரிகார யாக பூஜைகள் நடைபெற்றன.

தம்பதி சமேதமாக காட்சியளித்த நவக்கிரக குருவுக்கு முல்லைப்பூ, கொண்டைக்கடலை மற்றும் மஞ்சள் நிற வஸ்திரம் சாத்துப்படி செய்யப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். இதேபோல, நாமக்கல் ஏகாம்பரேசுவரா் கோயில், மோகனூா் அசலதீபேசுவரா், கொல்லிமலை அறப்பளீஸ்வரா், வள்ளிபுரம் தான்தோன்றீஸ்வரா் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோயில்களிலும் குருப் பெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் திரளாக கலந்து கொண்டு தட்சிணாமூா்த்தி, குரு பகவானை வழிபாட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com