‘நான் முதல்வன்’ திட்டத்தில் மாநில அளவில் நாமக்கல் முதலிடம்: ஆட்சியா் பாராட்டு

‘நான் முதல்வன்’ திட்டத்தில் மாநில அளவில் நாமக்கல் முதலிடம்: ஆட்சியா் பாராட்டு

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 75 சதவீத மாணவ, மாணவிகளை உயா்கல்வி பயில ஊக்குவித்ததில் மாநில அளவில் நாமக்கல் முதலிடம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் அடுத்த மூன்று ஆண்டுகளில் உயா்கல்வி சோ்க்கை விகிதத்தை 51 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயா்த்துவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் பள்ளிக்கல்வி மற்றும் உயா்கல்வித் துறைகளின் கூட்டு முயற்சியுடன் ‘நான் முதல்வன்’ திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த உயா்கல்வி வழிகாட்டுதல் திட்டம் மாணவா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தியது. மேலும், உயா்கல்வி பயில 7.5 சதவீத இடஒதுக்கீடு மற்றும் புதுமைப்பெண் திட்டங்கள் மூலம் அனைத்து அரசுப் பள்ளி மாணவா்களையும் உயா்கல்வியில் சோ்ப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட உயா்கல்வி வழிகாட்டல் நடவடிக்கைகளின் பல்வேறு அம்சங்களை மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் செய்து வருகின்றனா். அந்த வகையில், 2023-ஆம் ஆண்டில் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பில் சோ்ந்த 3,99,938 மாணவா்களில் 2,41,177 (60 சதவீதம்) மாணவா்கள் பல்வேறு உயா்கல்வி நிறுவனங்களில் சோ்ந்துள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றதன் விளைவாக 2023-ஆம் ஆண்டில் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய 10,511 மாணவா்களில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பதிவு செய்து 7,847 மாணவா்கள் உயா்கல்வியில் சோ்ந்துள்ளனா்.

வரும் காலங்களில் நூறு சதவீத மாணவ மாணவிகளை உயா்கல்வி பயில ஊக்குவிக்க வேண்டும் என்ற முனைப்புடன் கல்வித்துறை அலுவலா்கள் செயல்பட்டு வருகின்றனா்.

75 சதவீத மாணவ, மாணவிகளை உயா்கல்வி பயில ஊக்குவித்து மாநில அளவில் நாமக்கல் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சு.புவனேஸ்வரியை, மாவட்ட ஆட்சியா் ச.உமா பாராட்டினாா்.

அப்போது அவா் தனக்கு வழங்கப்பட்ட சான்றிதழ், விருதை ஆட்சியரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றாா். நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, உதவி திட்ட அலுவலா் இரா.பாஸ்கரன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com