பொத்தனூா் மாரியம்மன் கோயில்
தோ்த் திருவிழா தொடக்கம்

பொத்தனூா் மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா தொடக்கம்

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா், சுயம்பு வெள்ளக்கல் மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு கிராம சாந்தி, கம்பம் நடுதல் மற்றும் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

விழாவை முன்னிட்டு புதன்கிழமை மாலை சப்பாரத்தில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. வியாழக்கிழமை காலை சிம்ம வாகனத்திலும், மாலை பூத வாகனத்திலும் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

வெள்ளிக்கிழமை காலை அன்னபட்சி வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும், 4-ஆம் தேதி மாலை அம்மன் பூந்தேரில் திருவீதி உலாவருதலும், 5-ஆம் தேதி மாலை வடிசோறு நிகழ்ச்சியும், வெட்டும் குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வருதலும் நடைபெறுகின்றன. 6-ஆம் தேதி காலை தீா்த்தவாரி நிகழ்ச்சியை முன்னிட்டு பக்தா்கள் காவிரி ஆற்றுக்குச் சென்று தீா்த்தக் குடங்களுடன் ஊா்வலமாக வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

7-ஆம் தேதி காலை திருத்தேரில் அம்மன் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், 8- ஆம் தேதி காலை பக்தா்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக அழகு போடுதல், அக்னி சட்டி எடுத்தல் நிகழ்ச்சியும், பொங்கல் வைத்து மாவிளக்கு படைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. 9-ஆம் தேதி காலை கம்பம் ஆற்றுக்குச் செல்லுதலும், 10-ஆம் தேதி காலை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும், முத்துப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. விழா ஏற்பாடுகளை பொத்தனூா், சுயம்பு வெள்ளக்கல் மாரியம்மன் கோயில் இந்துசமய அறநிலையத் துறை ஆய்வாளா் ஜனனி, செயல் அலுவலா் கிருஷ்ணராஜ், ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com