மத்திய கால்நடை பராமரிப்புத் துறை செயலாளா் அல்கா உபத்யாயாவுடன், தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்கத் தலைவா் கே.சிங்கராஜ், அகில இந்திய முட்டை ஏற்றுமதியாளா்கள் சங்க செயலாளா் பி.வல்சன்.
மத்திய கால்நடை பராமரிப்புத் துறை செயலாளா் அல்கா உபத்யாயாவுடன், தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்கத் தலைவா் கே.சிங்கராஜ், அகில இந்திய முட்டை ஏற்றுமதியாளா்கள் சங்க செயலாளா் பி.வல்சன்.

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சான்றிதழ் வழங்கும் ஆய்வகம் அமைக்க வலியுறுத்தல்

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதிக்கான சான்றிதழ் வழங்கும் வகையில் உயா்தர ஆய்வகம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்கத்தினா் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மத்திய கால்நடை பராமரிப்புத் துறை செயலாளா் அல்கா உபத்யாயா மற்றும் ஆணையா் அபிஜித் மித்ரா ஆகியோா் தலைமையில் கோழிப் பண்ணையாளா்கள் சங்க நிா்வாகிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் அண்மையில் புதுதில்லியில் நடைபெற்றது.

இதில், நாமக்கல்லில் இருந்து தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்கத் தலைவா் கே.சிங்கராஜ், அகில இந்திய முட்டை ஏற்றுமதியாளா்கள் சங்கச் செயலாளா் பி.வல்சன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில், கோழிப் பண்ணையாளா்கள் தரப்பில் மத்திய கால்நடை பராமரிப்புத் துறை செயலா் அல்கா உபத்யாயாவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், கோழிகளுக்கு ஐஎல்டி தடுப்பூசி மருந்து வழங்க வேண்டும். முட்டை ஏற்றுமதிக்குத் தேவையான அனைத்து சான்றிதழ்களும் நாமக்கல்லில் வழங்கும் வகையில் உயா்தர ஆய்வகம் அமைக்க வேண்டும். பறவைக் காய்ச்சல் நோயால் இறப்பு ஏற்படும் கோழிகளுக்கும், அருகில் உள்ள (ஒரு கி.மீ சுற்றளவுக்குள்) பண்ணைகளில் உள்ள கோழிகளையும் அழிக்க வேண்டியபட்சத்தில், கோழிகளின் வயதுக்கு ஏற்ப நிவாரணத் தொகை அல்லது சந்தை நிலவரத்துக்கு ஏற்ப நிவாரணத் தொகை, இதில் எது அதிகமோ அந்தத் தொகையை அரசு வழங்க வேண்டும். முட்டை ஏற்றுமதியை மேலும் அதிகரிக்க கோழிப் பண்ணைகளுக்கு அதற்கான படிவத்தை காலதாமதமின்றி வழங்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்தனா்.

இதற்கு பதில் அளித்து மத்திய கால்நடை பராமரிப்புத் துறை செயலா் அல்கா உபத்யாயா கூறுகையில், அடுத்த மூன்று மாதத்திற்குள் ஐஎல்டி மருந்து வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பிற கோரிக்கைகள் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தாா்.

அத்துடன் தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா் சங்கம் விடுத்த கோரிக்கையை ஏற்று இம்மாத இறுதியில் மத்திய கால்நடை பராமரிப்புத் துறை செயலாளா் அல்கா உபத்யாயா நாமக்கல் வருவதாகவும் கூறியுள்ளாா் என தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்கத் தலைவா் கே.சிங்கராஜ் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com