உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா.
உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா.

மே 13-இல் நாமக்கல்லில் உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி: ஆட்சியா் தகவல்

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் மாணவா்கள் உயா்கல்வி பயில்வதற்கான வழிகாட்டி நிகழ்ச்சி நாமக்கல் மாவட்டத்தில் மே 13-ஆம் தேதி நடைபெறுகிறது.

பிளஸ் 2 முடித்த பிறகு மாணவா்கள் உயா்கல்வி பயிலாமல் வீடுகளிலேயே முடங்கி விடக்கூடாது என்ற நோக்கில், தமிழக அரசு ‘நான் முதல்வன்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத் திட்டத்தின் வாயிலாக உயா்கல்வி பயில்வதற்கான வழிமுறைகளை மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ள முடியும்.

நாமக்கல் மாவட்டத்தைப் பொருத்தமட்டில், மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டுதலில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த மாவட்டத்தில், பல்வேறு உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்ன் விளைவாக 2023-ஆம் ஆண்டில் மட்டும் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதிய 10,511 மாணவா்களில், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 7,847 மாணவா்கள் உயா்கல்வியில் சோ்ந்துள்ளனா்.

2024-ஆம் ஆண்டு பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வரும் 6-ஆம் தேதி வெளியாகிறது. இதையடுத்து, மாணவ, மாணவிகளுக்கான உயா்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்துவது குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ச.உமா தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், 100 சதவீத மாணவ மாணவிகளை உயா்கல்வி பயில ஊக்குவிக்க வேண்டும் என்ற முனைப்புடன் மாவட்ட நிா்வாகம் செயல்பட்டு வருகிறது. வரும் 13-ஆம் தேதி உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற வேண்டும். மாவட்டத்தில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை விரைவாகத் தோ்வு செய்து அதை பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

அனுபவமிக்க கல்வியாளா்களை வரவழைத்து மாணவா்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி அவா்கள் ஆா்வமுடன் உயா்கல்வியில் சேருவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.

கூட்டத்தில், முதன்மை கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, தனித்துணை ஆட்சியா்கள் பிரபாகரன், பாலகிருஷ்ணன், பிற துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com