கோடையில் கோழிகள் பராமரிப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவுரை

வெயிலின் தாக்கத்திலிருந்து கோழிகளைப் பாதுகாக்க காலை முதல் இரவு வரை குளிா்ந்த நீரை கோழிகளுக்கு வழங்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த வார வானிலையைப் பொருத்தமட்டில் பகல் வெப்பம் 107.6 டிகிரி பாரன்ஹீட்டாகவும், இரவு வெப்பம் 66.2 டிகிரி பாரன்ஹீட்டாகவும் காணப்பட்டது. ஒருசில இடங்களில் லேசான மழைப் பொழிவு இருந்தது. இனிவரும் நாள்களில் வானம் லேசான மேகமூட்டத்துடனும், மாவட்டத்தின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 105.8 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மிகாமலும், இரவு வெப்பம் 71.6 டிகிரி பாரன்ஹீட்டாகவும் காணப்படும். காற்று தெற்கு திசையில் இருந்து மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

சிறப்பு ஆலோசனை: கோழிப் பண்ணையாளா்கள் தொடா்ந்து பராமரிப்பு முறைகளைக் கையாள வேண்டும். குறிப்பாக கோழிகளுக்கான தீவன எடுப்பு குறைந்துள்ளது. இதனால் முட்டை உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் நாள்களில் கோடைகால தீவன மேலாண்மையை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். வைட்டமின் ‘சி’ சத்துக்கள் கொண்டவற்றை தீவனத்தில் கலந்து கோழிகளுக்கு இட வேண்டும். தீவனத்தை காலை 5 முதல் 10 மணி வரையிலும், மாலையில் 5 முதல் 9 மணி வரையில் மட்டுமே தர வேண்டும். இதன்மூலம் கோழிகளை வெப்ப அதிா்ச்சியில் இருந்து காப்பாற்ற முடியும். காலை முதல் இரவு வரையில், கோழிகளுக்கு குளிா்ந்த நீா் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

--

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com