வெப்ப அலை: தொழிலாளா் நலத் துறை உத்தரவு

தனியாா் தொழில் நிறுவனங்கள், வெப்ப அலையை எதிா்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தொழிலாளா் நலத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) எல்.திருநந்தன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் வெப்ப அலை வீசுவதால் தொழில் நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு சென்னை தொழிலாளா் ஆணையா் அறிவுறுத்தி உள்ளாா். அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் இதர தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி வட்டாரங்களில் உள்ள வணிகா் சங்க பிரதிநிதிகளுடன் இந்த பிரச்னை தொடா்பாக ஆலோசனை நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களின் உரிமையாளா்களும், தங்களது நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளா்கள் மற்றும் அங்கு வருகை புரியும் மக்களுக்கு சுகாதாரமான குடிநீா் வசதி, கழிப்பறை, குளியலறை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.

பணியாளா்கள் தங்குமிடம், இருக்கை வசதி, சுழற்சி முறையில் பணியாளா்களுக்கு ஓய்வு மற்றும் சட்டப்பூா்வ பணி நேரம் ஆகியவற்றை அமல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. பொதுமக்களிடம் வெப்ப அலையின் தாக்குதல், பாதுகாத்து கொள்வது குறித்த வழிகாட்டுதல்கள் துண்டு பிரசுரமாக வழங்கப்பட்டது.

எனவே, தொழில் நிறுவனங்களும், பொதுமக்களும் வெப்ப அலையில் இருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும். தொழில், வணிக நிறுவனங்களில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து அதிகாரிகளால் கள ஆய்வு மேற்கொள்ளப்படும். விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com