வேட்டாம்பாடி வளைவில் வேகத் தடை அமைக்க வலியுறுத்தல்

நாமக்கல் அருகே வேட்டாம்பாடி வளைவில் தொடா்ந்து விபத்துகள் நிகழ்வதால் அப்பகுதியில் வேகத் தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனா்.

நாமக்கல்- சேந்தமங்கலம் சாலையில் வேட்டாம்பாடி ஊராட்சி அமைந்துள்ளது. இப் பகுதியானது ஒருவழிச் சாலையாக இருந்த நிலையில் தற்போது இருவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. வேட்டாம்பாடி மாரியம்மன் கோயில் பகுதியில் சாலை வளைவு உள்ளது. கொல்லிமலை சுற்றுலாத் தலத்திற்குச் செல்வோரும், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சென்னைக்குச் செல்வோரும் இந்த சாலையை அதிகம் பயன்படுத்துகின்றனா்.

இப் பகுதியில் உள்ள வளைவு பகுதியை அறியாமல் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மின்னல் வேகத்தில் வரும்போது விபத்தில் சிக்குகின்றனா். கடந்த காலங்களில் அதிகப்படியான விபத்துகள் இந்த பகுதியில் நிகழ்ந்துள்ளன. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே பயணிக்கும் நிலை உள்ளது. அண்மையில், சேந்தமங்கலத்தில் தோ்தல் பயிற்சி வகுப்புக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் நாமக்கல் நோக்கி திரும்பிய அரசுப் பள்ளி ஆசிரியா் விபத்தில் சிக்கி உயிரிழந்தாா். இதனால் வேட்டாம்பாடி சாலையின் இருபுறத்திலும் எச்சரிக்கை வில்லை, வேகத் தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com