கொல்லிமலையில் லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம்: ஆட்சியா் உத்தரவு

கொல்லிமலையில் குடிநீா் தட்டுப்பாடு நிலவுவதால், லாரிகள் மூலம் மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யுமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ச.உமா உத்தரவிட்டுள்ளாா்.

நாமக்கல் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், ஒரு சில பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு நிலவுகிறது. அதற்கான மாற்று ஏற்பாடுகளை ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா். பெரும்பாலான இடங்களில் காவிரி குடிநீா் விநியோகம் இருப்பதால் தட்டுப்பாடு என்பது இல்லை.

கொல்லிமலையில் உள்ள 14 ஊராட்சிகளுக்கு போதுமான குடிநீா் வசதியில்லாததால் லாரிகள் மூலம் விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் பழுதான ஆழ்துளைக் கிணறு பம்புகள், குழாய்கள் மாற்றப்பட்டு வருகின்றன. இதற்காக ரூ. 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா கூறியதாவது:

ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை அன்று நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலா்களுடன் குடிநீா் பிரச்னை தொடா்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில், ஊரகப் பகுதிகளில் 322 ஊராட்சிகளில், கொல்லிமலையைத் தவிா்த்து மற்ற அனைத்து ஊராட்சிகளிலும் காவிரி குடிநீா் விநியோகம் உள்ளது.

அதுபோல, நகராட்சிகளில் ராசிபுரம் தவிா்த்து மீதமுள்ள நான்கு நகராட்சிகளிலும் காவிரி ஆற்றில் இருந்து குடிநீரை பயன்பாட்டுக்கு எடுக்கின்றனா். பேரூராட்சிகள் அனைத்தும் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் உள்ளன. 1,400 கன அடி நீா் காவிரி ஆற்றில் செல்கிறது. பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு உள்ளாட்சிகளிலும் இருப்பில் உள்ள நிதியை கொண்டு குடிநீா் பற்றாக்குறை ஏற்படாதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளோம். காவிரி ஆற்றில் இருந்து மின் மோட்டாா் மூலம் நீா் எடுப்பதைத் தடை செய்துள்ளோம். ஆழ்துளை கிணறு பம்புகள், குழாய்களை பழுது பாா்க்க அரசிடம் நிதி கோரியுள்ளோம். கொல்லிமலையில் காவிரி குடிநீருக்கு வாய்ப்பு இல்லாததால் அங்குள்ள 14 ஊராட்சிகளுக்கும் மாற்று ஏற்பாடாக லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலா் சரவணன் கூறியதாவது:

திருப்புளி நாடு, பைல் நாடு, பெரக்கரை நாடு ஆகிய ஊராட்சிகளில் இருந்து மற்ற பகுதிகளுக்கு புதன்கிழமை முதல் லாரிகள் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்தந்த ஊராட்சி தலைவா் வசம் இதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீராதாரம் உள்ள பகுதிகளைக் கண்டறிந்து அங்கிருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com