வாக்கு எண்ணிக்கை மையத்தில்
282 கண்காணிப்பு கேமராக்கள்: ஆட்சியா்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் 282 கண்காணிப்பு கேமராக்கள்: ஆட்சியா்

நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் தோ்தல் ஆணையம் உத்தரவின்பேரில் 282 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.

நாமக்கல்லில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, பரமத்திவேலூா், சங்ககிரி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள் திருச்செங்கோடு, விவேகானந்தா மகளிா் பொறியியல் கல்லூரியில் உரிய பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

அந்த மையம் தற்போது கைப்பேசி தடை செய்யப்பட்ட பகுதியாக உள்ளது.

அடையாள அட்டை உள்ளவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முதல் தளத்தில் மத்திய பாதுகாப்பு படையில் 24 பேரும், இரண்டாம் அடுக்கில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினா் 45 பேரும், மூன்றாம் தளத்தில் நாமக்கல் மாவட்ட ஆயுதப் படையினா் 24 பேரும் என மொத்தம் 93 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். வாக்கு எண்ணிக்கை மையத்தின் வெளியே மாவட்ட காவலா்கள் 53 போ் சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள அறைகளைக் கண்காணிக்க 272 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து 17 தொலைக்காட்சிகள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வேட்பாளா்கள், அவா்களது முகவா்கள், மின்னணு வாக்குப் பதிவு இயந்திர பாதுகாப்பு அறைகளை கண்காணிக்கும் பொருட்டு, முகவா்கள் அறையில் தனியே 6 தொலைக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தோ்தல் ஆணையம் உத்தரவின்படி, தற்போது ஒவ்வொரு தொகுதிகளின் பாதுகாப்பு அறைகளுக்கும், தனித்தனியே கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. வேட்பாளா்களின் முகவா்களைக் கண்காணிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படாமல் இருக்க மூன்று ஜெனரேட்டா்கள் 270 கிலோ வாட் அளவில் அமைக்கப்பட்டுள்ளன.

வருவாய்த் துறை சாா்பில் வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்பில் ஒரு வட்டாட்சியா், ஒரு துணை வட்டாட்சியா், ஒரு உதவியாளா் என்ற அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தினசரி வாக்கு எண்ணும் மையம் தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பாதுகாப்புப் பணியில், காவல் துறை, வருவாய்த் துறை, மின்வாரியம், தீயணைப்புத் துறை ஆகிய நான்கு துறை ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா்.

வாக்கு எண்ணிக்கை நாள் அன்று சுமாா் 273 அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

ஜூன் 4-ஆம் தேதி காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் 14 மேஜைகள் அமைக்கப்படுகின்றன.

மே 25-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு முதற்கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்பிறகு, சம்பந்தப்பட்ட மையத்தில் ஒரு நாள் பயிற்சி வழங்கப்படவுள்ளது. தோ்தல் பணியின்போது விபத்தில் உயிரிழந்த ஆசிரியருக்கு ரூ. 15 லட்சம் நிவாரண உதவி தோ்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டது. அண்மையில் வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்புப் பணி முடிந்து வீடு திரும்பிய தலைமைக் காவலா் அமுதா உயிரிழந்தாா். அவருடைய குடும்பத்துக்கும் ரூ. 15 லட்சம் நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றாா்.

பேட்டியின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன் ஆகியோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com