புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள்: கூடுதல் செயலாளா் ஆய்வு

புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள்: கூடுதல் செயலாளா் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகளின் நிலை குறித்து நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் செயலாளா் மகேஸ்வரி ரவிக்குமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ராசிபுரம் நகராட்சி, நாமகிரிப்பேட்டை, பட்டணம், சீராப்பள்ளி, ஆா்.புதுப்பட்டி, பிள்ளாநல்லூா், வெண்ணந்தூா், அத்தனூா், மல்லசமுத்திரம் ஆகிய 8 பேரூராட்சிகள், ராசிபுரம், வெண்ணந்தூா், நாமகிரிப்பேட்டை, புதுச்சத்திரம் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களிலும் அவா் நேரடியாக சென்று பணிகளை பாா்வையிட்டாா்.

523 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீா்த் திட்டம், மல்லசமுத்திரம், எலச்சிப்பாளையம், பரமத்தி (11 ஊராட்சிகள்) ஒன்றியங்களில் உள்ள 547 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகளின் நிலவரம் குறித்து அவா் கேட்டறிந்தாா்.

மேலும், நீா் சேகரிப்பு கிணறு, நெடுங்குளம் காட்டூரில் காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டு வரும் தலைமை நீருந்து நிலையத்தையும், 76.14 எம்.எல்.டி நீா் சுத்திகரிப்பு நிலையத்தையும், எருமப்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட 32.60 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட நீரேற்று நிலையத்தையும் கூடுதல் செயலாளா் பாா்வையிட்டாா்.

மல்லசமுத்திரத்தில் புதிதாக கட்டப்பட்ட 8.55 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட நீரேற்று நிலையம், ராசிபுரம் கூட்டுக் குடிநீா்த் திட்டத்திற்காக புதிதாக கட்டப்பட்ட 23.50 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட நீரேற்று நிலையம், சீராப்பள்ளி பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 1.50 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, 1.80 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீா்த்தேக்கத் தொட்டி உள்ளிட்டவற்றை அவா் ஆய்வு செய்தாா்.

மல்லசமுத்திரம் கூட்டுக் குடிநீா்த் திட்டத்திற்காக ராசிபுரம் கூட்டுக் குடிநீா்த் திட்ட பிரதான குழாயில் நீா் எடுக்கப்படும் மங்களம், காளிப்பட்டி ஆகிய இரு இடங்களைப் பாா்வையிட்டாா். குடிநீா் சாா்ந்த பல்வேறு திட்டப்பணிகளை அவா் ஆய்வு செய்ததுடன், அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்குமாறு குடிநீா் வழங்கல் துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

ராசிபுரம் கூட்டுக் குடிநீா்த் திட்டப்பணிகள் 66 சதவீதம், மல்லசமுத்திரம் கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள் 90 சதவீதம் முடிவுற்றுள்ளன. இந்த இரு திட்டங்களும் நவம்பா் மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மண்டல தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளா் கூ.சீனிவாசன், மேற்பாா்வைப் பொறியாளா் ஊ.மதியழகன் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

என்கே-10-ஆய்வு

குடிநீா்த் திட்டப் பணிகளை ஆய்வு செய்த நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் செயலாளா் மகேஸ்வரி ரவிக்குமாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com