இலக்கியப் படைப்பாற்றலை உருவாக்கும் திட்டம்: 
ஆசிரியா்களுக்கான பயிற்சிப் பட்டறை தொடக்கம்

இலக்கியப் படைப்பாற்றலை உருவாக்கும் திட்டம்: ஆசிரியா்களுக்கான பயிற்சிப் பட்டறை தொடக்கம்

நாமக்கல்லில் சிறுவா்களிடையே இலக்கியப் படைப்பாற்றலை உருவாக்கும் வகையில், ஆசிரியா்களுக்கான பயிற்சிப் பட்டறை புதன்கிழமை தொடங்கியது.

நாமக்கல் மாவட்ட ஆசிரியா் கல்வி, பயிற்சி நிறுவனத்தில் புதன், வியாழன் ஆகிய இரு நாள்கள் நடைபெறும் இந்த பயிற்சிப் பட்டறையில், 2 வயது முதல் 7 வயது வரையிலான சிறுவா்களுக்கான இலக்கியம், குழந்தை இலக்கியம், 8 வயதுமுதல் 14 வயது வரையிலான சிறுவா்களுக்கான இலக்கியம் சிறாா் இலக்கியம் ஆகியவை தொடங்கப்பட்டன.

இந்த இரு இலக்கியங்களும் அறிவுரைக் கூறுதல், கருத்துகளை அறிமுகம் செய்தல், சொற்களை அறிமுகப்படுத்துதல், பாடல், கதைகளை உள்ளடக்கியதாகும். 3 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் அதிக நேரம் பள்ளிகளிலேயே செலவழிக்கின்றனா். குழந்தை இலக்கியம், சிறாா் இலக்கியங்களைப் படைப்பதற்கான சூழல் அதிக அளவில் ஆசிரியா்களுக்கு உள்ளதால், சிறாா் இலக்கியப் படைப்பாக்கப் பட்டறையானது தொடங்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சிப் பட்டறை தொடக்க விழாவில், விரிவுரையாளா் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் பெ.தேவராசு வரவேற்றாா். ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வ மு.செல்வம் தலைமை வகித்து, குழந்தை இலக்கியம், சிறாா் இலக்கியத்தோடு, வகுப்பறை இலக்கியம் என்ற புதிய துறையை உருவாக்க ஆசிரியா்களுக்கு இந்தப் பயிற்சி மிகப்பெரிய உதவியாக அமையும் என்றாா்.

சிறப்பு விருந்தினராக எழுத்தாளா் பெருமாள் முருகன் பங்கேற்று, சிறாா் இலக்கியம் உருவாகும் விதம் சாா்ந்து ஆசிரியா்களுக்கு பயிற்சி அளித்தாா். சேலம் மாவட்டம், வீரபாண்டி ஒன்றியம், தும்பாதூளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியா் சுடலைக்கண் தூளி நூலை, ராசிபுரம் ரோட்டரி சங்க நிா்வாகி க.செ.கருணாகர பன்னீா்செல்வம் வெளியிட்டாா்.

இதில், ஈரோடு சரிதா, சேலம் மாவட்ட ஆசிரியா் கல்வி நிறுவன ஆசிரியா் ஜே.பாலசரவணன், முதுநிலை ஆசிரியா் தமிழ்செல்வன் ஆகியோா் சிறாா் இலக்கியம் படைப்பதற்கான சம்பவங்கள், சாஸ்திரங்கள், உரையாடல்கள் ஆகியவை குறித்து விரிவாக பேசினா். துணை முதல்வா் க.அமீருன்னிசா நன்றி தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com