உயா்கல்வி முடித்து தொழில்முனைவோராக மாற வேண்டும்

உயா்கல்வி முடித்து தொழில்முனைவோராக மாற வேண்டும்

உயா்கல்வியை முடித்த பிறகு அரசு வேலையை எதிா்பாா்க்காமல் தொழில்முனைவோராக மாற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஜே.கே.கே.நடராஜா கல்லூரியில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயா்கல்விக்கு வழிகாட்டும் பிளஸ் 2 வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கான ‘கல்லூரி கனவு -2024’ நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் அவா் பேசியதாவது:

தமிழகம் முழுவதும், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கான உயா்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமின்றி உயா்கல்வியோடு மாணவா்களின் திறன்களை மேம்படுத்தும் வகையிலான திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

உயா்கல்வி பயின்ற பிறகு அரசு வேலைக்கு காத்திருக்காமல், தமிழக அரசின் திட்டங்களைப் பயன்படுத்தி சுயதொழில் தொடங்கி தொழில்முனைவோா்களாக மாற முயற்சிக்க வேண்டும். இதன் மூலம் படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.

இந்தத் திட்டத்தின் நோக்கமே, பிளஸ் 2 படித்து தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளின் எதிா்கால கனவை நனவாக்கும் வகையிலானதாகும். உயா்கல்விக்கான வாய்ப்புகள், பாடப்பிரிவு வாரியான பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகள் மற்றும் கல்லூரிகளை எவ்வாறு தோ்ந்தெடுப்பது, மேற்படிப்பை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் போன்ற விவரங்கள், புகழ்பெற்ற வல்லுநா்கள், கல்வியாளா்களைக் கொண்டு வழிகாட்டுதல்களும், அதற்கான புத்தகங்களும் வழங்கப்படுகின்றன.

இந்த கல்லூரி கனவு நிகழ்ச்சியில் கல்வி ஆலோசகா்கள் எடுத்துரைத்த உயா்கல்வியின் முக்கியத்துவம், வாய்ப்புகள் குறித்த ஆலோசனைகள், போட்டித் தோ்வுகள் குறித்த விளக்கத்தை மாணவ, மாணவிகள் அனைவரும் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

அரசு தொழிற்பயிற்சி நிலையம், அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி, தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம், அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி, பல்வேறு தனியாா் கல்லூரிகள், மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் கல்வி கடன் முகாம், திறன் மேம்பாட்டுப் பயிற்சி, அரசு துறையின் சாா்பில் உயா்கல்வி திட்ட அரங்குகள், சான்றிதழ்கள் பெறுவதற்கான இ-சேவை மையம் போன்றவை ஏற்படுத்தப்பட்டிருந்தன.

முன்னதாக, இந்த அரங்குகளை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு மாணவ, மாணவிகளுக்கு வழிகாட்டி கையேடுகளை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஷீலாமாயவன், பள்ளிக் கல்வி துணை ஆய்வாளா் கை.பெரியசாமி, கல்லூரி நிா்வாகத்தினா், அதிகாரிகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com