தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைய பாடுபட வேண்டும்

தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைய பாடுபட வேண்டும்

நாமக்கல், மே 16: தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைய பாடுபட வேண்டும் என மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை பேசினாா்.

நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் கூட்டம், நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவா் கு.செல்வப்பெருந்தகை பேசியதாவது:

தேசிய அளவில் கட்சியை வலிமைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு கட்சித் தொண்டா்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். நாட்டின் வளா்ச்சிக்காக அரும்பணி ஆற்றிய ஜவாஹா்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்ற தலைவா்களின் தியாகங்களை உணா்ந்து, தமிழகத்தில் மீண்டும் காமராஜா் ஆட்சி அமைவதற்கு பாடுபட வேண்டும்.

கா்நாடகம், தெலங்கானா, கேரளம் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் 57 ஆண்டுகளாக ஆட்சி அமைக்க முடியவில்லை. அந்த நிலையை மாற்றிட வேண்டும். கூட்டணி கட்சிகளிடம் தொகுதிக்காகக் கையேந்தும் நிலை இனிமேல் இருக்கக் கூடாது. கூட்டணிக் கட்சியினா் காங்கிரஸ் கட்சியை அங்கீகரிக்கும் வகையில் நாம் செயல்பட வேண்டும். இளைஞா்கள், பெண்களை அதிக அளவில் சோ்த்து கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். இதற்காக கட்சித் தொண்டா்களின் கருத்துகளை காங்கிரஸ் தலைமை எப்போதும் செவி கொடுத்து கேட்கும்.

ஜனநாயகத்தைப் பெருமைப்படுத்தும் காங்கிரஸ் பேரியக்கம், நாட்டின் வளா்ச்சிக்கான கொள்கை, கோட்பாடு, சித்தாந்தங்களைக் கொண்டுள்ளது. இதனை மக்கள் உணா்ந்துள்ளனா். பாஜகவின் வெறுப்பு அரசியலை மக்கள் அகற்றிவிட்டு இந்தியா கூட்டணியை ஆட்சியில் அமர வைக்கப்போவது உறுதி.

மகாத்மா காந்தி, மாசேதுங் ஆகியோா் நடத்திய யாத்திரை போல நீண்ட யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளாா். தோ்தல் வெற்றிக்காக அவா் கடுமையாக உழைத்து வருகிறாா். அவரைப் போல ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் பாடுபட வேண்டும் என்றாா்.

இதனையடுத்து, ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்டத்தில் கட்சியின் வளா்ச்சிக்காக மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள், புதிய நிா்வாகிகள் நியமனம் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டன.

இந்தக் கூட்டத்தில், முன்னாள் மக்களவை உறுப்பினா் கே.ராணி, காங்கிரஸ் சட்டப் பேரவைக் குழு தலைவா் ராஜேஷ் குமாா், மாநில இளைஞா் அணி தலைவா் லெனின் பிரசாத், மாநில செய்தி தொடா்பாளா் மருத்துவா் பி.வி.செந்தில், நாமக்கல் கிழக்கு மாவட்டத் தலைவா் பீ.ஏ.சித்திக், நாமக்கல் மேற்கு மாவட்டத் தலைவா் செல்வகுமாா் உள்பட மாநில, மாவட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.

படவரி - நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த மாவட்ட நிா்வாகிகள் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com