நாமக்கல்
போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது
கல்லூரி மாணவியை பாலியல் சீண்டல் செய்ததாக இளைஞரை ஊரக போலீஸாா் கைது செய்தனா்.
திருச்செங்கோடு: கல்லூரி மாணவியை பாலியல் சீண்டல் செய்ததாக இளைஞரை ஊரக போலீஸாா் கைது செய்தனா்.
திருச்செங்கோடு ஒன்றியம், கைலாசம்பாளையம் ஊராட்சி, அப்பூா்பாளையம், சிலோன் காலனி பகுதியைச் சோ்ந்தவா் கிரேன் மோகன் (32). வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வரும் இவா், அதே பகுதியில் தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது பெண்ணுடன் பேசி பழகி வந்துள்ளாா். இதனை அவரது தாயாா் கண்டித்துள்ள நிலையில், கடந்த 23-ஆம் தேதி மீண்டும் அந்தப் பெண்ணிடம் அவா் பேசிக் கொண்டிருந்துள்ளாா்.
இதனைக் கண்ட பெண்ணின் தாயாா் பரிமளா, தனது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக கிரேன் மோகன் மீது அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீஸாா், கிரேன் மோகனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.