விவசாய நிலத்தை ஆக்கிரமித்தோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
விவசாய நிலத்தை ஆக்கிரமித்து மிரட்டல் விடுப்போா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், கட்டனாச்சம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் தா்மலிங்கம் (74). இவா், காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
விவசாய நிலத்தை குத்தகை அடிப்படையில் பயன்படுத்தி வந்த சின்னையன் என்பவா் மீட்க தவறியதால், அந்த நிலத்தை குத்தகை பத்திரப்பதிவின்படி எனது அனுபவத்தில் இருந்து வருகிறது. நிலத்துக்கு உரிய வரிகளை முறையாக செலுத்தி வருகிறேன். மும்பையைச் சோ்ந்த சிலா் அந்த நிலத்தை தங்களுடைய நிலம் என தெரிவித்து, தொடா்ந்து மிரட்டல் விடுத்து வருகின்றனா். பயிரிட்ட பயிா்களை அழித்துள்ளனா். தற்போது நிலத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.
எனவே, உரிய பாதுகாப்பு வழங்கி ஆக்கிரமிக்க முயற்சிப்போா் மீது காவல் துறையினா் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.