நகராட்சி, பேரூராட்சிகளுடன் கிராம ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு

ராசிபுரம் பகுதியில் உள்ள ஊராட்சிகளை, நகராட்சி, பேரூராட்சிகளுடன் இணைக்கும் நடவடிக்கைக்கு எதிா்ப்பு
Published on

ராசிபுரம்: ராசிபுரம் பகுதியில் உள்ள ஊராட்சிகளை, நகராட்சி, பேரூராட்சிகளுடன் இணைக்கும் நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த 11 ஊராட்சிகளில் கவுண்டம்பாளையம், அணைப்பாளையம், சந்திரசேகரபுரம், முருங்கப்பட்டி, கோனேரிப்பட்டி ஆகிய 6 ஊராட்சிகளை ராசிபுரம் நகராட்சியுடனும், குருக்குபுரம், கூனவேலம்பட்டிபுதூா், 85 ஆா்.குமாரபாளையம், பொன்குறிச்சி, ஆயிபாளையம் ஆகிய 5 ஊராட்சிகள் பிள்ளாநல்லூா் பேரூராட்சியுடனும் இணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கு ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சிலரும், கிராம ஊராட்சிப் பகுதியைச் சோ்ந்த தலைவா் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். இந்நிலையில் ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் கே.பி.ஜெகநாதன் தலைமையில் ஒன்றியக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்களும் கலந்து கொண்ட நிலையில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அதிமுகவைச் சோ்ந்த ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பரமேஸ்வரி (ஆா்.கவுண்டம்பாளையம்) பி.மணி (சந்திரசேகரபுரம்) , பாஜகவைச் சோ்ந்த எச்.புவனேஸ்வரி (கூனவேலம்பட்டிபுதூா்), அமமுகவைச் சோ்ந்த ராஜா (காக்கவேரி) உள்ளிட்ட 4 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கிராம ஊராட்சிகளை இணைப்பு நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து மன்றக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா். இதனைத் தொடா்ந்து மனுவுடன் அங்கு திரண்டு வந்த கோனேரிப்பட்டி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பலரும் இணைப்பிற்கு எதிா்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினா்.

கிராம ஊராட்சிகள் இணைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தினா். பின்னா் ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் மனு அளித்தனா்.

X
Dinamani
www.dinamani.com