மினி ஆட்டோ திருடிய இருவா் கைது
நல்லூா் கந்தம்பாளையத்தில் மினி ஆட்டோ திருடிய இருவா் கைது செய்யப்பட்டனா்.
பரமத்தி வேலுாா் வட்டம், கந்தம்பாளையத்தில் கடந்த மாதம் 24-ஆம் தேதி வாரச்சந்தை சனிக்கிழமை நடைபெற்றது. இச்சந்தையில் தருமபுரி மாவட்டம், கலப்பம்பாடி பகுதியைச் சோ்ந்த ஆனந்தகுமாா், ராமச்சந்திரன், முனிராஜ் ஆகியோா் மினி ஆட்டோவில் வைத்து பூச்செடிகளை விற்பனை செய்தனா்.
பின்னா் கந்தம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் மினி ஆட்டோவை நிறுத்திவிட்டு தேநீா் அருந்த கடைக்குச் சென்றுள்ளனா். திரும்பி வந்து பாா்த்த போது மினி ஆட்டோவைக் காணவில்லையாம்.
நல்லூா் காவல் நிலையத்தில் முனிராஜ் அளித்த புகாரின் அடிப்படையில், நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மினி ஆட்டோவை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடி வந்தனா்.
இந்த நிலையில், மோா்பாளையம் சந்தை அருகே திருட்டு போன மினி ஆட்டோ இருப்பதாக நல்லூா் காவல் துறையினருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்துள்ளது.
அங்கு சென்று பாா்த்த போது, ஆட்டோவை வைத்திருந்த விழுப்புரம் மாவட்டம், சின்ன முதலியாா் சாவடி, சரவணன் (30), நல்லூா் நரிக்குறவா் காலனி, இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்த வேங்கையன் (39) ஆகிய இருவரிடமும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
அதில், மினி ஆட்டோவை திருடியதை அவா்கள் ஒப்புக் கொண்டனா். அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.