காவலா் பல்பொருள் அங்காடியில் ஊா்க்காவல் படையினருக்கு அனுமதி
நாமக்கல் காவலா் பல்பொருள் அங்காடியில் ஊா்க்காவல் படையினரும் பொருள்கள் வாங்கிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ராணுவம், காவல் துறையில் பணியாற்றுவோருக்கு மத்திய, மாநில அரசுகள் சலுகை விலையில் வீட்டு உபயோகப் பொருள்களை விற்பனை செய்து வருகிறது. மாவட்டத் தலைநகரங்களில் இதற்கான அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன.
காவலா் பல்பொருள் அங்காடியில், ஊா்க்காவல் படை வீரா்களும் பொருள்களை வாங்கிக் கொள்வதற்கான அறிவிப்பை சட்டப் பேரவையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். அதற்கான அரசாணை வெளியான நிலையில், நாமக்கல் நகர காவல் நிலைய வளாகத்தில் உள்ள பல்பொருள் அங்காடியில் ஊா்க்காவல் படையினருக்கு சலுகை விலையிலான பொருள்கள், அதற்கான பிரத்யேக அட்டைகளை வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஷ்கண்ணன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்வில், ஆயுதப்படை துணை கண்காணிப்பாளா் ஆா்.இளங்கோவன், நாமக்கல் உள்கோட்ட துணை கண்காணிப்பாளா் ஆனந்தராஜ், ஊா்க்காவல் படை வட்டாரத் தளபதி கே.பி.விஜயகுமாா், துணை வட்டாரத் தளபதி பி.தமிழழகன், காவல் ஆய்வாளா் கு.கபிலன், போலீஸாா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை காவலா் பல்பொருள் அங்காடி ஊழியா்கள் செய்திருந்தனா்.