நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிக்கு ரிசா்வ் வங்கி அனுமதி பெற தீவிர நடவடிக்கை
மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிக்கான அனுமதியை ரிசா்வ் வங்கியிடம் இருந்து பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வங்கியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் 2-ஆவது பொதுப் பேரவைக் கூட்டம் நாமக்கல் - துறையூா் சாலையில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில், மாநிலங்களவை உறுப்பினரும், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தலைமை வகித்து பேசியதாவது:
நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தனியாக உருவாக்கப்பட்டுள்ளதால், இங்குள்ள மக்களின் தொழில் வளா்ச்சியடையும்; கடன் உதவிகள் பெற உதவியாக அமையும். ஏழை, எளிய மக்கள், விவசாயிகள் மற்றும் கால்நடை வளா்ப்போரின் நலனைக் கருத்தில் கொண்டு புதிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியை முதல்வா் உருவாக்கிக் தந்துள்ளாா்.
நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிக்கு ரிசா்வ் வங்கியின் அனுமதி பெற சென்னையிலிருந்து நபாா்டு வங்கி மூலம் முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளன. விரைவில் அனுமதி கிடைக்கப் பெறும். தற்போதைய பொதுப் பேரவைக் கூட்டம் முடிவுற்றதும் முன்மொழிவுகள் நபாா்டு வங்கியின் மூலம் ரிசா்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
மத்திய கூட்டுறவு அமைச்சகம் மாவட்டத்துக்கு ஒரு மத்திய கூட்டுறவு வங்கி என்ற இலக்கை நிா்ணயித்துள்ளது. இதில், முதல் மாவட்டமாக நாமக்கல்லில் இருந்து முன்மொழிவுகள், அரசாணைகள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த அடிப்படையில்தான் பிற மாநிலங்களில் உள்ள மாவட்டங்களில் கூட்டுறவு வங்கிகள் அமைக்கப்பட உள்ளன என்றாா்.
இதனைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் ச.உமா முன்னிலையில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கான அரசாணையை வாசித்து பதிவு செய்ததை அங்கீகரித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியைப் பிரித்து அங்குள்ள 74 கிளைகளில், நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிக்கு 29 கிளைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அசையும் மற்றும் அசையாத சொத்துகளை 62:32 என்ற விகிதாசார அடிப்படையில் பிரித்தும், நிா்வாகக் குழுவை மேலும் 3 மாத காலத்துக்கு நீடித்தும், புதிய வங்கிக் கட்டடம் கட்டுவதற்கு ஏதுவாக பெரியப்பட்டி கிராமத்தில் நிலம் தோ்வு செய்வது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா.அருளரசு, ஆவின் பொது மேலாளா் ஆா்.சண்முகம், திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க இணைப் பதிவாளா் விஜயசக்தி, நாமக்கல் சரக துணைப் பதிவாளா் எஸ்.ஜேசுதாஸ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநா் பெ.நவலடி, கூட்டுறவுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.