ராசிபுரம் அருகே ரூ. 5.26 கோடி மதிப்பீட்டில் 8 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா: அமைச்சா் மா.மதிவேந்தன் பங்கேற்பு
ராசிபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் ரூ. 5.26 கோடி மதிப்பில் 8 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 2 குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்களை திறந்து வைத்தாா்.
ராசிபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தொகுதிக்கு உள்பட்ட மூலப்பள்ளிப்பட்டி, திம்மநாயக்கன்பட்டி ஊராட்சிகளில் தலா ரூ. 8 லட்சம் என மொத்தம் ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேற்கூரையுடன் கூடிய 22 எதிா் சவ்வூடு பரவல் குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்களை திறந்து வைத்தாா்.
தொடா்ந்து, மூலப்பள்ளிப்பட்டி ஊராட்சியில் ரூ. 9.16 லட்சம் மதிப்பீட்டில் மேற்கு மாதா கோயில் முதல் பசிரிமலை சாலை வரை 130 மீ. நீளம், 4.5 மீ. அகலத்திற்கு சிமென்ட் கான்கிரீட் சாலை அமைத்தல், ரூ. 9.16 லட்சம் மதிப்பீட்டில் மாதா கோயில் அருகில் சிறுபாலம் அமைக்கும் பணி, ஈஸ்வரமூா்த்திபாளையம் ஊராட்சியில் ரூ. 10.25 லட்சம் மதிப்பீட்டில் காத்தா கவுண்டனூரில் 155 மீ. நீளம், 4 மீ. அகலத்திற்கு சிமென்ட் சாலை அமைக்கும் பணி, ரூ. 7.32 லட்சம் மதிப்பீட்டில் 82 மீ. நீளம், 4 மீ. அகலத்திற்கு சிமென்ட் சாலை அமைக்கும் பணி, பிரதமா் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 3.14 கோடி மதிப்பீட்டில் ஆத்தூா் பிரதான சாலை முதல் சிங்கிலியன் கோம்பை சாலை வழி தாண்டாகவுண்டன்பாளையம் மூலக்காடு வேம்பாகவுண்டன் புதூா் வரை தாா் சாலை அமைக்கும் பணி, ரூ. 1.79 கோடி மதிப்பீட்டில் ஆயில்பட்டி ஊராட்சி ஊத்துப்புளிகாடு வழி ஆண்டிகுட்டை சாலை வரை தாா் சாலை அமைக்கும் பணி, அயோத்திதாசா் பண்டிதா் குக்கிராமம் வளா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 4.75 லட்சம் மதிப்பீட்டில் காா்கூடல்பட்டி ஊராட்சி, மெட்டாலா குக்கிராமம் புதுக்காலனி சரசு வீடு முதல் கனகராஜ் வீடு வரை கான்கீரிட் சாலை அமைக்கும் பணிகள் என மொத்தம் ரூ. 5.26 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.
இதில் முன்னாள் எம்எல்ஏ கே.பி.ராமசாமி மற்றும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.