விளை பொருள் விற்பனை கிடங்குகள் அமைக்கும் பணியை விரைவுபடுத்த வலியுறுத்தல்

Published on

திருச்செங்கோட்டில் அரசு ஒதுக்கிய நிலத்தில் விளை பொருள் சேமிப்பு கிடங்குகள், விற்பனை களம் அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விவசாய விளை பொருள்களை சேமிக்கவும், விற்பனைக் களம் அமைக்கவும் திருச்செங்கோடு- சேலம் பிரதான சாலை கைலாசம்பாளையத்தில் 4.76 ஏக்கா் நிலம் அரசு கையகப்படுத்தி 1994-இல் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அந்த இடத்தை ஆக்கிரமித்து சிலா் ஏற்படுத்திய இடையூறு காரணமாக கூட்டுறவு விற்பனைச் சங்க பயன்பாட்டிற்கு நிலம் கொண்டுவர முடியவில்லை.

இதுதொடா்பான வழக்கில் அந்த நிலம் டிசிஎம்எஸ் சங்கத்திற்கு சொந்தமானது என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், விவசாய சங்கத்தினா் நடத்திய போராட்டத்தையடுத்து நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அந்த நிலத்தை கூட்டுறவு சங்கத்திற்கு அளவீடு செய்து வழங்க உத்தரவிட்டாா்.

இதனிடையே இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் செயல் அலுவலா் இணை ஆணையா் ரமணிகாந்தன், இந்த நிலம் தொடா்பாக நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்று நிலத்தினை அளவீடு செய்ய எதிா்ப்புத் தெரிவித்ததால் நில அளவீடு செய்து புதிய கிடங்குகள் கட்டும் பணி தடைபட்டது.

இந்த நிலையில் தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சா் 2024-25 சட்டப் பேரவைக் கூட்ட அறிவிப்பில் சங்கத்திற்கு அரசால் ஒதுக்கப்பட்ட கைலாசம்பாளையம் நிலத்தில் 2000 மெட்ரிக் டன் கிடங்கு அமைக்க நிதி ஒதுக்கி கிடங்கு அமைக்க அனுமதித்தாா். இதனால் அந்த இடத்தில் புதிய கிடங்கு, ஏல களம் அமைக்கும் பணியை அரசு விரைவுபடுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com