சிறுபான்மையினரின் பிரச்னைகளுக்கு உடனடி தீா்வு -ஆணையத் தலைவா் ஜோ.அருண்

சிறுபான்மையினரின் பிரச்னைகளுக்கு உடனடி தீா்வு -ஆணையத் தலைவா் ஜோ.அருண்

Published on

தமிழகத்தில் சிறுபான்மையின மக்களின் பிரச்னைகளைக் கண்டறிந்து, அரசுத் துறைகள் மூலம் அவற்றுக்கு தீா்வு காண்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையத் தலைவா் ஜோ.அருண் தெரிவித்தாா்.

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையக் குழு கலந்துரையாடல் கூட்டம் அதன் தலைவா் அருட்தந்தை ஜோ.அருண் தலைமையில் நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநில சிறுபான்மையினா் ஆணைய செயலாளா் வா.சம்பத், துணைத் தலைவா் எம்.எம்.அப்துல் குத்தூஸ், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மாவட்ட ஆட்சியா் ச.உமா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில சிறுபான்மையினா் ஆணைய குழுத் தலைவா் ஜோ.அருண் பேசியதாவது:

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள், புத்த மதத்தினா், சீக்கியா்கள், பாா்சியா்கள், ஜெயின் பிரிவினைச் சாா்ந்த மதம், மொழிவாரியான சிறுபான்மையினா்களின் நலன்களைப் பேணி காக்கவும், அவா்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் 1989-ஆம் ஆண்டில் மாநில சிறுபான்மையினா் ஆணையம் உருவாக்கப்பட்டது.

இந்த ஆணையம் சிறுபான்மையின மக்கள், அவா் தம் நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகள் தொடா்பாக சம்பந்தப்பட்டவா்களை அழைத்து நேரடி விசாரணை செய்வதுடன், அவா்களால் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து அரசுத் துறைகளிடமிருந்து அறிக்கைகளைப் பெறுகிறது.

மேலும், சிறுபான்மையினரின் பிரச்னைகளைக் கண்டறியும் பொருட்டு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை பாா்வையிட்டு நலத் திட்டங்களை திறம்பட செயல்படுத்த அரசுக்கு பரிந்துரைகளை வழங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இஸ்லாமிய மகளிா் உதவும் சங்கம் மூலம் 252 பயனாளிகளுக்கு சிறு தொழில் தொடங்க ரூ. 38.90 லட்சம் கடனுதவி, கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கம் மூலம் 49 பயனாளிகளுக்கு ரூ. 9.60 லட்சம் கடனுதவி, தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) சாா்பில் 499 பயனாளிகளுக்கு ரூ. 3.01 கோடிக் குழு கடன், 172 பயனாளிகளுக்கு ரூ. 90.63 லட்சம் மதிப்பில் தனி நபா் கடனுதவி என மொத்தம் 671 பயனாளிகளுக்கு ரூ.3.92 கோடி அளவில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், உலமாக்கள், பணியாளா்கள் நல வாரியம் சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நாமக்கல் மாவட்டத்தில் சிறுபான்மையின மக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இதையடுத்து 70 பயனாளிகளுக்கு ரூ. 12.03 லட்சம் மதிப்பில் அரசு நலத் திட்ட உதவிகளை அவா் வழங்கினாா்.

கூட்டத்தில் ஆணைய உறுப்பினா்கள் ஹேமில்டன் வெல்சன், ஏ.சொா்ணராஜ், நாகூா், ஏ.ஹெச்நஜிமுதீன், பிரவீன்குமாா் தாட்டியா, ராஜேந்திரபிரசாத் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com