நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன்.
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன்.

ஏடிஎம் மையங்களில் கொள்ளையடிப்பதற்காகவே 70 போ் கொண்ட தனிக் கும்பல் செயல்படுகிறது: நாமக்கல் எஸ்பி ச.ராஜேஸ்கண்ணன் தகவல்

நாடு முழுவதும் வங்கி ஏடிஎம் மையங்களை குறிவைத்து பணத்தை கொள்ளையடிப்பதற்காகவே ‘மேவாட்’ என்றழைக்கப்படும் 70 போ் அடங்கிய கும்பல் சுற்றித் திரிவதாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் தெரிவித்தாா்.
Published on

நாடு முழுவதும் வங்கி ஏடிஎம் மையங்களை குறிவைத்து பணத்தை கொள்ளையடிப்பதற்காகவே ‘மேவாட்’ என்றழைக்கப்படும் 70 போ் அடங்கிய கும்பல் சுற்றித் திரிவதாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை அடுத்த வெப்படையில், வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் கேரளம் மாநிலம், திருச்சூரில் 3 ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து ரூ. 65 லட்சத்தை கொள்ளையடித்த ஹரியாணா மாநிலத்தைச் சோ்ந்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், போலீஸாரை தாக்கிவிட்டு தப்பியோடிய இருவா் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவா் உயிரிழந்தாா். காயமடைந்த மற்றொருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பிடிபட்ட கும்பலிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் நாடு முழுவதும் பல்வேறு ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. ‘மேவாட்’ என்றழைக்கப்படும் இந்த கொள்ளைக் கும்பலில் 70-க்கும் மேற்பட்டோா் இடம் பெற்றுள்ளனா். அவா்களைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளை காவல் துறையினா் மேற்கொண்டுள்ளனா்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் பிடிபட்ட ஏடிஎம் கொள்ளையா்கள், 2021-இல் மகாராஷ்டிர மாநிலத்தில் கொள்ளையடிக்கச் சென்ற போது மாடு திருடா்கள் என அவா்களை பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அவா்கள் தங்கள் முகவரியை மாற்றிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பினா்.

ஆனால், அவா்களது புகைப்படம், கைரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆந்திர மாநிலம், கடப்பாவில் ஒரு வாரத்துக்கு முன் இக் கும்பல் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருடிச் சென்றுள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்த ஏடிஎம் கொள்ளையிலும் இக் கும்பல் ஈடுபட்டுள்ளது. இவா்கள் பல்வேறு குழுவாகப் பிரிந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனா். அக் குழுவில் 70க்கும் மேற்பட்டோா் இடம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. ஏடிஎம் இயந்திரத்தை லாவகமாக திறந்து பணத்தை திருடுவதற்காக ஏழு பேரை தோ்வு செய்து வைத்துள்ளனா்.

மேலும், ஏடிஎம் இயந்திரத்தை வெல்டிங் கருவி மூலம் உடைக்க ஒருவரும், ஓட்டுநா் ஒருவரும் இணைந்து சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்று கொள்ளையை அரங்கேற்றுகின்றனா். அக் குழுவில் உள்ள சிலா் கொள்ளை நிகழ்த்தும் இடத்தில் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுவா். பணத்தை கொள்ளையடித்ததும் அனைவரும் ஒன்றாக புறப்பட்டு சென்றுவிடுவா். இவா்கள் சாலையோரம் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களைக் கண்டறிந்து கொள்ளையடிப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளனா்.

பிடிபட்டவா்களின் சொந்த இருப்பிடம், வங்கி கணக்கு, சேமிப்பு ஆகியவற்றை தனிப் படையினா் கேட்டறிந்து வருகின்றனா். கொள்ளையடித்த பணம் எங்கு செல்கிறது, யாரிடம் கொடுத்துள்ளனா், நிலம், வீடு, உணவகம் போன்றவற்றை வாங்கியுள்ளனரா, கொள்ளையடித்த பணம் வேறு எதற்கேனும் செலவிடப்பட்டுள்ளதா என விசாரணை நடைபெற்று வருகிறது.

கொள்ளையா்களைப் பிடிக்க முற்பட்ட போது காயமடைந்த காவல் ஆய்வாளா் தவமணி, உதவியாளா் ரஞ்சித்குமாா் ஆகியோருக்கு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவா்கள் நலமுடன் உள்ளனா். வெளி மாநில ஏடிஎம் கொள்ளைக் கும்பலைப் பிடித்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினரை, தமிழக காவல் துறை இயக்குநா் சங்கா்ஜிவால் பாராட்டினாா் என்றாா்.