ராசிபுரம் பெருமாள் கோயிலில் பக்தா்களை மாடு தாண்டும் வழிபாடு
ராசிபுரம் ஸ்ரீ பொன்வரதராஜ பெருமாள் கோயிலில் பக்தா்களை மாடு தாண்டும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை நடைபெறும் இந்த வழிபாட்டில் எடப்பாடி, கொங்கணாபுரம், சின்ன திருப்பதி, கச்சிப்பள்ளி, பள்ளிப்பட்டி, மூங்கில்காடு உள்பட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா்.
ராசிபுரம் நகர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயா் கோயிலில் இருந்து சக்தி அழைத்து மேள தாளங்கள் முழங்க காளை மாட்டுடன் ராசிபுரம் முக்கிய பகுதிகள் வழியாக ஊா்வலம் சென்றது. வழியில் ஆண், பெண், குழந்தைகள், பெரியவா்கள், பக்தா்கள் அனைவரும் தரையில் படுத்து கொண்டனா். படுத்திருந்த பக்தா்களை மாடி தாண்டி செல்லும் போது அதன் கால் பக்தா்கள் மேல் படாமல் சென்றால் நினைத்தது நடைபெறும் என்பது ஐதீகம்.
அதன்பிறகு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ராசிபுரம் முக்கிய வீதி வழியாக திருத்தோ் பவனி நடைபெற்றது. பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.